ஐதராபாத்: நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே மொத்தம் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடராக நடைபெற உள்ளது.
பயிற்சியாளர் விவிஎஸ் லட்சுமணன்:
இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தென் ஆனாப்பிரிக்கா டி20 தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்க தொடரின் இடையே இந்திய டெஸ்ட் அணி ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடுகிறது.
இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் உள்ளதால் தென் ஆப்பிரிக்க தொடருக்கான பயிற்சியாளராக லட்சுமணன் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
VVS LAXMAN - THE COACH OF INDIA! 🚨
— CRIC INSIGHTS (@Cric_InsightsX) October 28, 2024
VVS Laxman is likely to be India's Head Coach for the South Africa T20I series, as Gautam Gambhir will be Australia-bound for the Border-Gavaskar Trophy.
[Cricbuzz] pic.twitter.com/L2UvZFo4Wo
ஆஸ்திரேலியா தொடர்:
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடர் வரும் நவம்பர் 8, 10, 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்த தொடருக்காக சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், வரும் நவம்பர் 24ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் தொடங்க உள்ள நிலையில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி வரும் நவம்பர் 10 அல்லது 11ஆம் தேதியே ஆஸ்திரேலியா புறப்பட உள்ளது. அந்த அணியினருடன் பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் உடன் செல்கிறார்.
லட்சுமணன் இதுவரை எப்படி?:
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான லட்சுமணன் இந்திய அணிக்காக ஏற்கனவே பயிற்சியாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்துள்ளார். தேசிய கிரிக்கெட் அகாடமியில் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த லட்சுமணன், அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பு வகித்துள்ளார்.
மேலும், 49 வயதான லட்சுமணன் இதுவரை 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 17 சதங்கள் 2 இரட்டை சதங்கள், 56 அரை சதங்களுடன் 8 ஆயிரத்து 781 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 86 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6 சதங்கள் 10 அரை சதங்களுடன் 2 ஆயிரத்து 338 ரன்கள் எடுத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் விவரம் வருமாறு: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல், ராமன்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், விஜய்குமார் வைஷாக், ஆவேஷ்கான், யஷ் தயாள்.
இதையும் படிங்க: இந்திய மண்ணில் வரலாற்று சாதனை படைத்த நியூசிலாந்து.. டெஸ்ட் தொடரை வென்று அபாரம்!