ஐதராபாத்: இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் எதிர்வரும் ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடப் போவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. வரும் அக்டோபர் 1ஆம் தேதி ஹரியானா சட்டபேரவைக்கு ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், வினேஷ் போகத்தை தங்கள் பக்கம் இழுக்க பல்வேறு கட்சிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் எந்தக் கட்சியில் இணைவது என்பது குறித்து வினேஷ் போகத் இன்னும் முடிவு செய்யவில்லை என சொல்லப்படுகிறது. அதேநேரம் வரும் ஹரியானா சட்டப் பேரவை தேர்தலில் அவர் நிச்சயம் போட்டியிடுவார் என அவரது நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்து உள்ளது.
ஹரியானா சட்டப் பேரவை தேர்தலில் வினேஷ் போகத் தனது சகோதரியும் பாஜக வேட்பாளருமான பபிதா போகத்தை எதிர்த்தும், மற்றொரு இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, யோகேஷ்வர்தத் எதிராகவும் போட்டியிட உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தீவிர அரசியலில் இணையும் ஆர்வம் தனக்கு இல்லை என்றும் அதை காலம் தான் முடிவு செய்யும் என்றும் வினேஷ் போகத் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டார். 50 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனை, இறுதிப் போட்டிக்கு முன் குறிப்பிட்ட எடைப் பிரிவை காட்டிலும் 100 கிராம் கூடுதலாக இருப்பதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், தகுதி நீக்கத்தை எதிர்த்து விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தில் வினேஷ் போகத் முறையிட்டார். அங்கு அவரது மனு நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து தனக்கு கியூபா வீராங்கனையுடன் இணைந்து வெள்ளிப் பதக்கத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும் என வினேஷ் போகத் முறையிட்டார்.
இந்த மனு மீதான தீர்ப்பை மூன்று முறை ஒத்திவைத்த விளையாட்டுக்கான நடுவர் தீர்ப்பாயம் இறுதியில் மனுவை தள்ளுபடி செய்தது. வெள்ளிப் பதக்கம் வழங்கப்படும் என எதிர்பார்த்து காத்திருந்த வினேஷ் போகத்துக்கும் இந்திய ரசிகர்களுக்கும் கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து இந்திய திரும்பிய வினேஷ் போகத்திற்கு ரசிகர்கள், குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிங்க: "மு.க.ஸ்டாலினை தெரியாது.. விஜயை நல்லா தெரியும்.."- துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர்! - Manu Bhaker