பிரான்ஸ்: சர்வதேச விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் முறையீட்டை ஏற்றுக் கொண்டு அது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்து உள்ளது. இதனால் வினேஷ் போகத்துக்கு வெள்ளி பதக்கம் வழங்க அதிக அளவில் வாய்ப்பு இருப்பதாக தகவல் கூறப்படுகிறது.
பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து இந்திய வீராங்கனை வினேஷ் போகத், விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். மேலும் குறிப்பிட்ட எடைப் பிரிவில் தன்னை மீண்டும் எடை போட வேண்டும் என வினேஷ் போகத் முறையிட்டு இருந்தார்.
வினேஷ் போகத்தின் கோரிக்கையை நிராகரித்த நடுவர் நீதிமன்றம் முடிவுகள் எடுக்கப்பட்டு விட்டதால் திட்டமிட்டப்படி போட்டிகள் நடைபெறும் என உத்தரவிட்டது. இதையடுத்து கால் இறுதிக்கு முந்தைய சுற்று, கால் இறுதி மற்றும் அரை இறுதி போட்டிகளின் போது தனது எடை சரியான அளவில் இருந்ததால் தனக்கு வெள்ளிப் பதக்க வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மீண்டும் முறையீடு செய்தார்.
இந்நிலையில், வினேஷ் போகத்தின் முறையீட்டை ஏற்றுக் கொண்ட விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் அதுகுறித்து விசாரிப்பதாக தெரிவித்து உள்ளது. இதனால் வெள்ளிப் பதக்கம் விவகாரத்தில் இன்று அல்லது நாளை வினேஷ் போகத்திற்கு முடிவு தெரிவிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத், 100 கிராம் எடை அதிகமாக இருப்பதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் விரக்திக்குள்ளான வினேஷ் போகத் மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதுகுறித்து வினேஷ் போகத் தனது எக்ஸ் பக்கத்தில், "எனக்கு இப்போது வலிமை இல்லை. குட்பை மல்யுத்தம் 2001-2024. உங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருப்பேன். என்னை மன்னித்துவிடுங்கள்" என்று பதிவிட்டு தனது ஓய்வு முடிவை அறிவித்து இருந்தார். அண்மையில் உடல் நலப் பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட வினேஷ் போகத், அதில் இருந்து மீண்டு வந்து கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு மீண்டும் சர்வதேச விளையாட்டில் தடம் பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு பதக்கம்! அமன் ஷெராவத் அரை இறுதிக்கு தகுதி! - paris olympics 2024