நியூயார்க்: 9வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஜூன் 2ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஜூன் 12) நியூயார்க்கில் உள்ள நாசாவ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 25வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது.
இதில், இந்தியா - அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி தொடக்க வீரர்களாக, ஷயான் ஜஹாங்கீர் - ஸ்டீவன் டெய்லர் களம் கண்டனர். ஓவரின் முதல் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார் ஷயான் ஜஹாங்கீர்.
அடுத்து வந்த ஆண்ட்ரிஸ் கௌஸ் சொற்ப ரன்னில் வெளியேறினார். அடுத்தடுத்து அமெரிக்காவிற்கு இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்தன. அதன் பின்னர் வந்த ஆரோன் ஜோன்ஸ் வெறும் 11 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பின்னர், நீத்திஷ் குமார் களம் கண்டார். 8 ஓவர் முடிவிற்கு 26 - 3 என்ற கணக்கில் விளையாடியது.
களத்தில் நீத்திஷ் குமார் - ஸ்டீவன் டெய்லர் ஜோடி நிதானமாக விளையாட தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்து சிறப்பாக விளையாடிய ஸ்டீவன் டெய்லர், அக்சர் வீசிய அபார பந்தில் ஆட்டமிழக்க, கோரி ஆண்டர்சன், ஹர்மீத் சிங் களம் கண்டனர். அடுத்தடுத்து வந்த வீரர்கள் பெரிதாக அணிக்கு ரன்களை குவிக்கவில்லை.
18 ஓவர் முடிவிற்கு 100 - 7 என்ற கணக்கில் விளையாடியது. களத்தில் ஜஸ்தீப் சிங் - ஷாட்லி வான் ஷால்க்விக் இருந்தனர். இதில், ஷாட்லி வான் ஷால்க்விக் 10 பந்துகளுக்கு 11 ரன்களும், ஜஸ்தீப் சிங் 2 ரன்கள் மட்டுமே எடுத்து 20வது ஓவர் முடிவில் ரன் அவுட் ஆனார்.
இந்த போட்டியில் அமெரிக்கா அணியில் அதிகபட்சமாக நீத்திஷ் குமார் 27 ரன்களும், ஸ்டீவன் டெய்லர் 24 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளும், அக்சர் பட்டேல் ஒரு விக்கெட்டை வீழ்த்தி அசத்தினர்.
இதையும் படிங்க: டாஸ் வென்று இந்தியா பந்துவீச்சு தேர்வு! சூப்பர் 8 சுற்றுக்குள் நுழையுமா? - IND vs USA T20 world Cup