சென்னை: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 2024 தொடரில் நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் சென்னை லயன்ஸ் அணியும் நடப்பு சாம்பியனான கோவா சாலஞ்சர்ஸ் அணியும் மோதின.
இதில் முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சென்னை லயன்ஸ் அணியின் சரத் கமலும் கோவா சாலஞ்சர்ஸ் அணியின் மிஹாய் போபோசிகாவுடன் மோதினார். இதில் சரத் கமல் 2-1 (11-6, 11-10, 6-11) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இரண்டாவதாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சென்னை லயன்ஸ் அணியின் சகுரா மோரியும், கோவா சாலஞ்சர்ஸ் அணியின் யாங்சி லியுவை எதிர்கொண்டார். இதில் சகுரா மோரி 2-1 (11-9, 11-9, 9-11) என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார்.
மூன்றாவதாக நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் சென்னை லயன்ஸ் அணியின் சரத் கமல் - சகுரா மோரி ஜோடியானது கோவா சாலஞ்சர்ஸ் அணியின் ஹர்மீத் தேசாய் - யாங்சி லியு ஜோடியை சந்தித்தது. இதில் சரத் கமல் - சகுரா மோரி ஜோடி 0-3 (9-11, 10-11, 7-11) என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.
நான்காவதாக நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சென்னை லயன்ஸ் அணியின் ஜூல்ஸ் ரோலண்ட்டும், கோவா சாலஞ்சர்ஸ் அணியின் ஹர்மீத் தேசாயுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் ஹர்மீத் தேசாய் 2-1 (6-11, 11-7, 11-5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
கடைசியாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் சென்னை லயன்ஸ் அணியின் மவுமா தாஸ்ம் கோவா சாலஞ்சர்ஸ் அணியின் யஷஸ்வினி கோர்படே உடன் மோதினார். இதில் மவுமா தாஸ் 1-2 (5-11, 8-11, 11-3) என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
ஓட்டுமொத்தமாக நடைபெற்ற இந்த மோதலில் கோவா சாலஞ்சர்ஸ் அணி 9-6 என்ற கணக்கில் சென்னை லயன்ஸ் அணியை வீழ்த்தியது. கோவா சாலஞ்சர்ஸ் அணிக்கு இது 2வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி 4 மோதல்களில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வியை பதிவு செய்துள்ளது. சென்னை லயன்ஸ் அணி தனது 4வது மோதலில் 3-வது தோல்வியை பதிவு செய்தது.
அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரில் ஞாயிற்றுக்கிழமையான இன்று இரு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மாலை 5 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் புனேரி பல்டான் - ஜெய்ப்பூர் பாட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2வது ஆட்டத்தில் தபாங் டெல்லி டிடிசி - பிபிஜி பெங்களூரு ஸ்மாஷர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதையும் படிங்க: ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடங்கியது.. இன்றைய நாளில் என்ன நடந்தது?