ஐதராபாத்: இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுவதும் கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது நியூசிலாந்து அணி. நியூசிலாந்து அணியின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அந்நாட்டின் ஊடகங்கள் சிறப்பாக எழுதி வருகின்றன. இந்திய தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் நியூசிலாந்து ஊடகங்கள் பராட்டி வருகின்றன.
நியூசிலாந்து ஊடகங்கள்:
அதேநேரம் இந்திய அணியின் இரண்டு வீரர்கள் குறித்தும் நியூசிலாந்து ஊடங்களில் செய்திகள் வெளியாகின. இதில் ஒரு வீரர் குறித்து நியூசிலாந்து ஊடகங்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. அவர்கள் வேறு யாரும் இல்லை, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் ஆகியோர் தான்.
நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தியா கண்ட தோல்விக்கு ரோகித் சர்மாவின் மோசமான கேப்டன்சியும் ஒரு காரணம் என நியூசிலாந்து ஊடகங்கள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளன. ரோகித் சர்மாவின் தலைமைப் பணிகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் அந்நாட்டு பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளியாகி உள்ளன.
விமர்சனத்திற்குள்ளான விளையாட்டு:
பேட்டிங் மற்றும் கேப்டன்சி என இரண்டிலும் ஒருசேர ரோகித் சர்மா தோற்றுவிட்டதாகவும் இந்திய ரசிகர்கள் அவர் மீது மிகுந்த அதிருப்தியில் இருப்பதாகவும் நியூசிலாந்து ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன. எதிரணியை குறைத்து மதிப்பிடுதல், அலட்சியம் உள்ளிட்ட காரணங்களே இந்தியாவின் தோல்விக்கு காரணம் என கூறப்பட்டுள்ளன.
அதேநேரம், 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பன்ட்டை பாராட்டி நியூசிலாந்து பத்திரிகைகள் எழுதியுள்ளன. 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் கடந்த ரிஷப் பன்ட் அணியின் வெற்றிக்காக ஒற்றை ஆளாக விளையாடியது குறித்து நியூசிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரிஷப் பன்ட்க்கு புகழாரம்:
இலங்கையில் டெஸ்ட் தொடரை இழந்த கையோடு இந்தியா விரைந்த நியூசிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெஸ்ட் தொடரை 3-க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன், மேட் ஹென்ரி, மிட்செல் சான்ட்னர் உள்ளிட்ட வீரர்கள் காயம் காரணமாக விலகிய போதும் அந்த அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது.
ஏறத்தாழ 18 டெஸ்ட் தொடர்களை தொடர்ச்சியாக வென்று வந்த இந்திய அணிக்கு சொந்த மண்ணில் பெருத்த அடியாகவே நியூசிலாந்து டெஸ்ட் தொடர் தோல்வி அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடம் மட்டுமே தொடர் தோல்வியை எதிர்கொண்ட இந்திய அணி, தற்போது நியூசிலாந்திடமும் மண்ணைக் கவ்வி மோசமான சாதனை படைத்துள்ளது.
இதையும் படிங்க: இந்திய அணி விக்கெட் கீப்பர் திடீர் ஓய்வு அறிவிப்பு! 2025 ஐபிஎல்லில் இருந்தும் விலகல்!