சென்னை: தெற்கு ஆசியாவிலேயே முதல் முறையாக நைட் ஸ்ட்ரீட் கார் பந்தய போட்டிகள் சென்னையில் இரண்டு நாட்களாக நடைப்பெற்று வருகிறது. இதில் இரண்டாம் நாள் ஆட்டங்கள் இன்று நடைபெற்று வருகின்றன. பார்முலா 4 பந்தயத்தில் சென்னை டர்போ ரைடர்ஸ், கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங், ஸ்பீடு டெமான்ஸ் டெல்லி, பெங்களூரு ஸ்டெஸ்டர்ஸ், ஷ்ராச்சி ராஹ் பெங்கால் டைகர்ஸ், ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ், அகமதாபாத் ரேசர்ஸ், காட்ஸ்பீடு கொச்சி ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன.
ஒரு அணிக்கு 2 வீரர்கள் வீதம் 16 பேர் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு அணியிலும் 2 கார்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் தகுதி சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தகுதிச் சுற்றின் முதல் போட்டியின் ரவுண்டு 2ல் FLGP 4 கார் பந்தய போட்டியில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட வீரர்கள் மின்னல் வேகத்தில் பந்தய கார்களை இயக்கினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் இந்தியாவின் மெக்பெர்சன் 2 நிமிடம் மூன்று விநாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்து அசத்தினார். இரண்டாவது இடத்தை தில்ஜித்தும், மூன்றாவது இடத்தை டத்தாவும் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து ஐஆர்எல், பார்முலா 4-ன் தகுதி சுற்று போட்டிகளும் சுற்று மற்றும் பிரதான சுற்றின் போட்டிகளும் நடைபெற்று வருகிறது.
முன்னதாக 8 சுற்றுகளை கொண்ட இந்த பந்தயத்தின் கடைசி சுற்றில் இரண்டு கார்கள் மோதிக்கொண்டதால் பந்தயம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பார்முலா 4ன் போட்டிகளின் முதல் சுற்று கடந்த 24 மற்றும் 25ஆம் தேதிகளில் சென்னையை அடுத்து இருங்காட்டு கோட்டையில் நடைபெற்றது. சென்னையில் 2வது சுற்று போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன.
3வது சுற்று போட்டி கோவையில் செப்டம்பர் 13 முதல் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 4-வது மற்றும் 5-வது சுற்றுகள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கோவா, கொல்கத்தாவில் நடத்தப்படுகிறது. இறுதியில் 5 சுற்றுகளின் முடிவில் அதிக புள்ளிகளை பெறுபவர்கள் சாம்பியன் பட்டத்தை பெறுவார்கள்.
இதையும் படிங்க: சென்னையில் கங்குலி.. ஃபார்முலா கார் ரேஸ் பார்க்க வந்த பிரபலங்கள்! - Sourav Ganguly Formula 4 car race