சென்னை: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி, வெண்கலம் வென்ற மாரியப்பன், மனிஷா, நித்ய ஸ்ரீ ஆகியோர் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். வெற்றிப்பெற்ற வீரர்களுக்கு ரூ.5 கோடிக்கான காசோலைகளை வழங்கி பாரட்டினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன், "பாரீஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் வெல்ல ஆசைப்பட்டேன். ஆனால், போட்டிக்கு முந்தைய நாள் ஏற்பட்ட காய்ச்சல் அங்கு நிலவிய காலநிலையால் தங்கம் வெல்ல முடியாமல் போய்விட்டது. 2028ம் ஆண்டு பாராலிம்பிக்ஸ் போட்டியில் கண்டிப்பாக தங்கம் வென்று திரும்புவேன். போட்டி நடைபெறவுள்ள நாட்டின் காலநிலைக்கு ஏற்ப பயிற்சியாளரின் வழிகாட்டுதல்படி உடலை தயார் செய்ய உள்ளேன்.
மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் பாரீஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த 4 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.5 கோடிக்கான காசோலைகளை வழங்கினார்#CMMKSTALIN | #TNDIPR | #CM_MKStalin_Secretariat pic.twitter.com/7hnMQH6SVg
— TN DIPR (@TNDIPRNEWS) September 25, 2024
கடந்த 2016ம் ஆண்டு நான் தங்கம் வென்றபோது நான் ஒருவன் மட்டுமே தமிழக வீரனாக பங்கேற்றேன். முதலமைச்சர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் முயற்சியால், இந்த முறை தமிழகத்திலிருந்து 6 பேர் சென்று 4 பேர் பதக்கம் வென்றுள்ளோம். அரசு எங்களுக்கு எல்லா வகையிலும் ஆதரவாக உள்ளது" என்றார்.
இதையும் படிங்க : முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி; தமிழ்நாடு அணிக்கு ஆட்டம் காட்டிய ஆர்மி அணி அபார வெற்றி!
பின்னர் பேசிய பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி, "நான் பாராலிம்பிக்ஸில் வெள்ளி வென்றுள்ளேன். சிறு வயது முதல் தனியார் பயிற்சி மையங்களில் நான் பயிற்சி பெற்றதில்லை. முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் உள்ள மைதானங்களில் மட்டுமே பயிற்சி பெற்றேன். அரசுத் திட்டங்களால் பயனடைந்துள்ளேன். மற்ற மாநில வீரர்கள் நமது மாநிலத்தை பாராட்டுகின்றனர். அடுத்த பாராலிம்பிக்கில் தமிழக வீரர்கள் மேலும் பல பதக்கங்களை வெல்வோம்" என்றார்.
பேட்மிண்டன் வீராங்கனை மனிஷா கூறுகையில், "நான் பாராலிம்பிக்ஸில் வெண்கலம் வென்றுள்ளேன். இப்போதெல்லாம் சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்கு செல்வதற்கு முன்னரே அரசுத் தரப்பில் எங்களை அழைத்து பேசுகின்றனர். அதுவே எங்களுக்கு அதிகளவில் உத்வேகம் தருகிறது" என்றார்.