ஐதராபாத்: நடப்பாண்டுக்கான சையது முஷ்டாக் அலி டிராபி கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று காலை 9 மணிக்கு ராஜ்கோட்டில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத் - மேகாலயா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மேகாலயா அணியின் கேப்டன் ஆகாஷ் சவுத்ரி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
22 வயதான திலக் வர்மா தலைமையில் களமிறங்கிய ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் குவித்தது. ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் தன்மை அகர்வால் 55 ரன்களும், கேப்டன் திலக் வர்மா 151 ரன்களும் குவித்தனர்.
அபாரமாக விளையாடிய திலக் வர்மா 67 பந்துகளில் 151 ரன்கள் விளாசினார். இதன் மூலம் 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை திலக் வர்மா படைத்தார். இதற்கு முன் 147 ரன்கள் குவித்து ஸ்ரேயாஸ் ஐயர் இந்த சாதனையை படைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரைசதம் அடிக்க 28 பந்துகளை எடுத்துக் கொண்ட திலக் வர்மா, அடுத்த 23 பந்துகளில் சதம் விளாசினார். தென் ஆப்பிரிக்க தொடர் நிறைவு பெற்று 10 நாட்களே ஆன நிலையில், திலக் வர்மா அடித்த 3வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் சஞ்சு சாம்சனை தொடர்ந்து அடுத்தடுத்து சதம் விளாசிய வீரர் என்ற சிறப்பையும் திலக் வர்மா பெற்றார்.
மொத்தம் 90 இன்னிங்ஸ்களில் விளையாடிய திலக் வர்மா அதில் 2 ஆயிரத்து 950 ரன்கள் குவித்துள்ளார். இதில் நான்கு சதங்களும் அடங்கும். திலக் வர்மாவின் 151 ரன்கள் உதவியுடன் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய மேகாலயா அணி 15.1 ஓவர்களில் 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக அங்கித் ரெட்டி 4 விக்கெட்டுகளும், தனய் தியாகராஜன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். வரும் 2005 ஐபிஎல் தொடரில் திலக் வர்மாவை தங்கள் அணியில் மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: WATCH: வாயை கொடுத்து வாங்கிய ஸ்டார்க்.. தரமான பதிலடி கொடுத்த ஹர்சித்! வீடியோ வைரல்!