சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 92வது ஆண்டு விழா சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதான வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பி.அசோக் சிகாமணி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி வரவேற்பு அளித்தார்.
சங்கச் செயலாளர் ஆா்.ஐ.பழனி ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் தலைவரும், சிஎஸ்கே அணியின் உரிமையாளருமான சீனிவாசனின் மகள் ரூபா குருநாத், சிஇஓ கே.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய மகளிர் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், இந்திய கிரிக்கெட்டருமான டபிள்யு.வி.ராமன் சிறப்புரை ஆற்றி கோப்பைகள், உதவித் தொகைகளை வழங்கினார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 92ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக மாநிலம் முழுவதும் கிரிக்கெட் சங்கங்களின் சார்பாக கிரிக்கெட் விளையாட்டு போட்டி நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற கிரிக்கெட் கிளப்புக்கும், வீரர் வீராங்கனைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் 14, 16, மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது. மேலும் 23 ஸ்டேட், பெண்கள் டி20 டிராபி, ஆண், பெண் ஒரு நாள் டிராபி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் மாநிலம் முழுவதும் போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டியில் சிறந்த பவுலர், பேட்டர் மற்றும் ஆல்ரவுண்டர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கும், போட்டியை சிறப்பாக நடத்திய நடுவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள பல்வேறு கிரிக்கெட் கிளப்புகள் போட்டிகளில் பங்குபெற்று, வெற்றி பெற்ற கிரிக்கெட் கிளப்புகளுக்கு ஷீல்டு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக ஐபிஎல் வீரர் சாய் சுதர்சனும், வீராங்கனையாக கமலினியும் தேர்வு செய்யப்பட்டனர். அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய சாய் சசுதர்சன், ஒரு சதம், இரண்டு அரைசதம் உட்பட 527 ரன்களைக் குவித்து அசத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் சிறப்பாக பணியாற்றிய மூன்று பேரை அங்கீகரித்து அவர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சங்கப் பொருளாளர் டிஜே.சீனிவாசராஜ், துணைச் செயலாளர் ஆா்.என்.பாபா, இணைச் செயலாளர் கே.சிவக்குமாா் உள்பட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: டாப் 10 செஸ் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் நுழைந்த பிரக்ஞானந்தா.. முதலமைச்சர் வாழ்த்து!