நியூயார்க்: டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடரின் 21வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க வீரர்களாக குவின்டன் டி காக் மற்றும் ரீசா ஹென்ட்ரிக்ஸ் களம் இறங்கினர். டி காக் 18 ரன்னில் வெளியேற, ரீசா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, கேப்டன் எய்டன் மார்க்ரம் 4 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர்.
இதனால், 24 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது தென்னாப்பிரிக்கா. இதனையடுத்து ஹென்ரிச் கிளாசென் மற்றும் மில்லர் ஆகியோர் ஜோடி சேர்ந்து சரிவிலிருந்த அணியை மீட்டனர். இருவரும் இணைந்து 5 ஆவது விக்கெட்டிற்கு 79 ரன்கள் சேர்த்தனர். இதில், 3 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகள் என 46 ரன்கள் விளாசி இருந்த கிளாசென், தஸ்கின் அகமது வீசிய பந்தில் கிளின் போல்ட் ஆகி வெளியேறினர்.
அவரை தொடர்ந்து 29 ரன்கள் எடுத்து இருந்த மில்லர், ரிஷாத் ஹொசைன் வீசிய பந்தில் போல்ட் ஆகி வெளியேரினார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் சேர்த்தது தென்னாப்பிரிக்கா. வங்தேசம் அணி தரப்பில் தன்சிம் ஹசன் சாகிப் 3 விக்கெட்டுகளையும், ஸ்கின் அகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து 114 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது வங்கதேசம் அணி.
தொடக்க வீரர்கள் தன்சித் ஹசன் 9 ரன்னும், ஷாண்டோ 14 ரன்களும், லிட்டன் தாஸ் 9 மற்றும் ஷகிப் அல் ஹசன் 3 ரன்கள் எடுத்தனர். இதன்பின்னர் ஜோடி சேர்ந்த தவ்ஹித் ஹிருதாய் - மகமதுல்லா ஜோடி சரிவிலிருந்த அணியை மீட்டனர். இதனால் 15 ஓவர்களில் வங்கதேசம் அணி 83 ரன்களை எட்டியது. ஒரு கட்டத்தில் 30 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையிலிருந்தது வங்கதேசம் அணி.
ஆனால், அப்போது தான் ஆட்டம் தலைகீழாக மாறியது. 18வது ஓவரை ரபாடா வீச அந்த ஓவரில் 37 ரன்கள் எடுத்து இருந்த ஹிர்டாய் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் 12 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு தள்ளப்பட்டது வங்கதேசம். 19வது ஓவரில் 7 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை மஹாராஜ் வீசினர். ஆனால் கடைசி ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே வங்கதேச அணியால் எடுக்க முடிந்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா அணி சூப்பர் 8 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.
இதையும் படிங்க: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா.. புகழ்ச்சி மழையில் பும்ரா! எக்ஸ்பர்ட்களின் கருத்து என்ன?