மும்பை: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மே.6) இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 55வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசஸ் ஐதராபாத் அணிகள் களமிறங்கின.
டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி சன்ரைசஸ் ஐதராபாத் அணியின் இன்னிங்சை டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடங்கினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தது.
பும்ரா பந்துவீச்சில் அபிஷேக் சர்மா 11 ரன்களில் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மயங்க அகர்வால் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 5 ரன்களில் ஆட்டமிழந்து மயங்க் அகர்வால் ஏமாற்றம் அளித்தார். இதனிடையே சிறிது நேரம் நீடித்து விளையாடிக் கொண்டு இருந்த டிராவிஸ் ஹெட்டும் (48 ரன்) அரை சதத்தை நெருங்கும் நேரத்தில் பியூஷ் சாவ்லா பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன் பின் ஐதராபாத் அணியில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன. நிதிஷ் ரெட்டி 20 ரன், விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளெசன் 2 ரன், ஷபாஸ் அகமது 10 ரன், மேக்ரா ஜான்சன் 17 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். கடைசி கட்டத்தில் கேப்டன் பேட் கம்மின்ஸ் மட்டும் அணி கவுரமான ஸ்கோரை எட்ட கடுமையாக போராடிக் கொண்டு இருந்தார்.
20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தன. கேப்டன் பேட் கம்மின்ஸ் 35 ரன்களும், சன்வீர் சிங் 8 ரன்களும் எடுத்து களத்தில் நின்றனர். மும்பை அணி தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அவர்களை தொடர்ந்து அன்சுல் கம்போஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். மும்பை அணி 174 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.
இதையும் படிங்க: இந்திய அணியின் ஜெர்சியிலும் காவியா? டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி ஜெர்சி அறிமுகம்! - T20 World Cup Indian Team Jersey