பெங்களூரு : 17வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.15) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய 30வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - சன்ரைசஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளிசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணியின் இன்னிங்சை அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடங்கினர். அடித்து விளையாடிய அபிஷேக் சர்மா 39 ரன்கள் குவித்த நிலையில் ரிஸ்ஸி டோப்ளே பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹென்ரிச் கிளெசன் மற்றொரு தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்து அதிரடியாக விளையாடத் தொடங்கினார். அடித்து ஆடிய இந்த ஜோடி பெங்களூரு வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் விரட்டியது. குறிப்பாக இருவரும் இமாலய சிக்சர்களை விளாசி அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தினர்.
அபாரமாக விளையாடிய டிராவிஸ் ஹெட் சதம் விளாசினார். சதம் விளாசிய கையோடு டிராவிஸ் ஹெட் 102 ரன்கள் குவித்து லாக்கி பெர்குசன் பந்தில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அரை சதம் கடந்த விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளெசன் தன் பங்குக்கு 67 ரன்கள் குவித்து வெளியேறினார். இறுதிக் கட்டத்தில் எய்டன் மார்க்ராம் மற்றும் அப்துல் சமாத் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் அணி 250 ரன்களை கடந்தது.
20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய எய்டன் மாக்ராம் 32 ரன்களும், அப்துல் சமாத் 37 ரன்களும் அடுத்து கடைசி வரை களத்தில் நின்றனர். நான்கு ஓவர் பந்துவீசிய ரிஸ்ஸி டோப்ளே 68 ரன்களை வாரி வழங்கி 1 விக்கெட் மட்டும் வீழ்த்தினார்.
அதேபோல் விஜய்குமார் வைஷாக் 4 ஓவர்களில் 64 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதில் ஆறுதல் அளிக்கும் வகையில் லாக்கி பெர்குசன் மட்டும் 4 ஓவர்கள் பந்துவீசி 52 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேநேரம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 287 ரன்கள் குவித்து ஐதராபாத் சன்ரைசஸ் அணி வரலாற்று சாதனை படைத்தது.
முன்னதாக நடப்பு சீசனில் கடந்த மார்ச் 27ஆம் தேதி ஐதராபாத்தில் நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 8வது லீக் ஆட்டத்தில் சன்ரைசஸ் ஐதராபாத் அணி 277 ரன்கள் அடித்து சாதனை படைத்து இருந்தது. தற்போது தனது முந்தைய சாதனையை மீண்டும் முறியடித்து ஐதராபாத் அணி புது வரலாறு படைத்து உள்ளது.
இதையும் படிங்க : வான்கடே மைதானத்தில் மாயாஜாலம் செய்த தோனி.. புதிய சாதனைக்கு கேக் வெட்டி கொண்டாட்டம்! - MS Dhoni Hat Trick Sixes