டெல்லி: 17வது ஐபிஎல் தொடரின் 35வது போட்டி, டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இடையேயான போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
அணியின் தொடக்க வீரர்களான அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் அதிரடியான ஆட்டத்தை ஆடினர். குறிப்பாக, ஆட்டத்தில் முதல் ஓவரிலேயே டிராவிஸ் ஹெட் 1 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரி என விளாசினார். அதைத்தொடர்ந்து, பவர் ப்ளே ஓவரில் அனைத்து ஒவர்களையும் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் விளாசித் தள்ளினர்.
ஓவருக்கு 20 ரன்களுக்கு குறையாமல் ரன்களைக் குவித்து வந்த இவர்களின் கூட்டணி, பவர் ப்ளே முடிவில் 125 ரன்கள் சேர்த்திருந்தது. டி20 வரலாற்றில் ஒரு அணி பவர் ப்ளே முடிவில் 125 ரன்கள் குவித்தது, இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர், 46 ரன்களை எடுத்திருந்த அபிஷேக் ஷர்மா, குல்தீப் பந்து வீச்சில் அக்சாரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய எய்டன் மார்க்ரம் 1 ரன்னிலும், ஹென்ரிச் கிளாசென் 15 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். வாணவேடிக்கைகளைக் காட்டிக் கொண்டிருந்த டிராவிஸ் ஹெட் 32 பந்துகளில் 86 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். இது டெல்லி அணி சற்று நிம்மதியை அளித்தாலும், அடுத்து களமிறங்கிய நிதிஷ் ரெட்டி மற்றும் சபாஷ் அகமது கூட்டணி ரன்களை குவிக்க தொடங்கினர்.
ஹைதராபாத் அணி 200 ரன்களைக் கடந்திருந்த நிலையில், நிதிஷ் ரெட்டி 37 ரன்களில் வெளியேறினார். இருப்பினும், தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஷாபாஸ் அகமது அரைசதம் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 266 ரன்கள் குவித்தது.
அதன் பின்னர் 267 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கியது டெல்லி அணி. தொடக்க வீரர்களான பிரித்வி ஷா 16 ரன்களிலும் மற்றும் டேவிட் வார்னர் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தினர். அதனைத் தொடர்ந்து, களமிறங்கிய ஜேக் பிரேசர் மெக்குர்க் பந்துகளை பவுண்டரிகளை தாண்டி விளாசத் தொடங்கினார்.
15 பந்துகளில் அரை சதம் அடித்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 18 பந்துகளில் 7 சிச்ஸர்கள் மற்றும் பவுண்டரி என 65 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய அபிஷேக் பொரெல் 42 ரன்களும், அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 44 ரன்கள் என நிதானமாக ஆடி அணியின் ரன்களை அதிகரித்தனர்.
இவர்களுக்கு பின்னர் ஆடிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். 19.1 ஓவரில் 199 ரன்களை எடுத்திருந்த டெல்லி அணி அனைத்து விக்கேட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. ஆட்ட நாயகனாக ஹைதராபாத் அணியைச் சேர்ந்த டிராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் தனது 5வது வெற்றியைப் பதிவு செய்த ஹைதராபாத் அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிங்க: வினேஷ் போகத் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி!