இலங்கை: இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் அணி டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலேயான முதலாவது டி20 போட்டி, நேற்று (பிப்.17) தம்புள்ளை பகுதியில் உள்ள ரங்கிரி தம்புள்ளை சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இலங்கை அணி தனது இன்னிங்ஸ்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக பாத்தும் நிஸ்ஸங்கா - குசல் மெண்டிஸ் ஜோடி களமிறங்கியது. வந்த வேகத்தில் நிஸ்ஸங்கா வெறும் 6 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின், தனஞ்சய டி சில்வா களமிறங்கினார்.
பின்னர், குசல் மெண்டிஸ் 10 ரன்கள் எடுத்து 5வது ஓவரில் அவுட் ஆனார். பின், சதீர சமரவிக்ரம களமிறங்க, தனஞ்சய டி சில்வா அவுட் ஆனார். பின் சரித் அசலங்கா களமிறங்கிய வேகத்தில் பெவிலியன் திரும்பிச் சென்றார். பின், வனிந்து ஹசரங்கா களம் கண்டார்.
10 ஓவர் முடிவிற்கு 82-4 என்ற கணக்கில் அணி விளையாடியது. 12வது ஓவரில் 100 ரன்களைக் கடந்தது, இலங்கை அணி. 14வது ஓவரில் வனிந்து ஹசரங்கா சிக்ஸ், பவுண்டரி என மாறி மாறி விளாசினார். அதன் மூலம், தனது அரைசதத்தைப் பதிவு செய்தார். சதீர சமரவிக்ரம ரன் அவுட் ஆனார். 24 பந்துகளுக்கு 3 பவுண்டரிகள் வீதம் 25 ரன்கள் எடுத்தார்.
பின், ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்கி சொற்ப ரன்களில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். இதற்கிடையே வனிந்து ஹசரங்கா இப்ராகிம் பந்தை சமாளிக்க முடியாமல் ஆட்டமிழந்தார். 32 பந்துகளுக்கு 67 ரன்கள் எடுத்தார். களத்தில் மகேஷ் தீக்ஷனா - தசுன் ஷனக ஜோடி இருந்தனர்.
தீக்ஷனா சொற்ப ரன்களில் அவுட் ஆனார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்படி, இலங்கை அணி 10 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில், ஃபசல்ஹக் பாரூக்கி 3 விக்கெட்டுகளையும், நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்டுகளையும், அஸ்மத்துல்லாஹ், நூர் அஹ்மத் கரீம் ஜனத் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர், ஆப்கானிஸ்தான் அணி தனது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக இப்ராஹிம் சத்ரன் - ரஹ்மானுல்லா குர்பாஸ் ஜோடி களமிறங்கியது. குர்பாஸ் 2 ஓவரில் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், குல்பாடின் நைப் களமிறங்கினார்.
8 ஓவரில் குல்பாடின் நைப் போல்ட் ஆனார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 14வது ஓவரில் கேப்டன் இப்ராஹிம் சத்ரன் தனது அரை சதத்தை பதிவு செய்தார். அடுத்தடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதற்கிடையில் கரீம் ஜனத் மட்டும் 20 ரன்கள் எடுத்தார். அதன்படி ஆப்கானிஸ்தான் 9 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களைக் குவித்தது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் இலங்கை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மதீஷா பத்திரனா 4 விக்கெட்டுகளையும், தசுன் ஷனக 2 விக்கெட்டுகளையும், மஹீஷ் தீக்ஷனா, ஏஞ்சலோ மேத்யூஸ், வனிந்து ஹசரங்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர்.
இதையும் படிங்க: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்; மீண்டும் அணிக்கு திரும்புகிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்!