ஐதராபாத்: வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்தியா 2-க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது. இந்த வெற்றியின் மூலம் ஏறக்குறைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுவிட்டது. இந்திய அணி அடுத்தாக சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.
பார்டர் கவாஸ்கர் டிராபி:
அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. வங்கதேச தொடரை முழுமையாக கைப்பற்றியதால் இன்னும் எத்தனை போட்டிகளில் இந்தியா வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு அதிகாரப்பூர்வமாக தேர்வாக முடியும் என விரிவாக பார்க்கலாம்.
வங்கதேச தொடரை இந்தியா 1-க்கு 0 என்ற கணக்கில் வென்று இருந்தால் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறுவதில் சில சிக்கல்களை உருவாகி இருக்கும். 2023 -25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தற்போது இந்தியா 11 வெற்றி, இரண்டு தோல்விகளுடன் முதலிடத்தில் உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா:
இரண்டாவது இடத்தில் 8 வெற்றியுடன் ஆஸ்திரேலியா உள்ளது. வங்கதேச தொடரை அடுத்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுடன் மொத்தம் 8 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. ஒருவேளை வங்கதேச தொடர் 1-க்கு 0 என்ற கணக்கில் முடிந்திருந்தால், இந்தியா அடுத்து விளையாட உள்ள 8 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 5ல் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக குறைந்தது 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கும். ஆனால் தற்போது வங்கதேச தொடரை இந்தியா 2-க்கு 0 என கைப்பற்றியதால் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான 8 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஏதேனும் 3 ஆட்டங்களில் மட்டுமே இந்திய வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும்.
போட்டி அட்டவணை:
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 16ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் முதலாவது டெஸ்ட் அக்டோபர் 16 முதல் 20 வரை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. 2வது டெஸ்ட் அக்டோபர் 24 முதல் 28ஆம் தேதி வரை மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெறுகிறது.
3வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நவம்பர் 1 முதல் 5ஆம் தேதி வரை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. தொடர்ந்து அதே நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி பார்டர் கவாஸ்கர் டிராபியில் கலந்து கொண்டு விளையாடுகிறது.
இதையும் படிங்க: 147 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் உலக சாதனை படைத்த அஸ்வின்! முத்தைய முரளிதரனை பின்னுக்கு தள்ளி மைல்கல்! - Ashwin World Record