சென்னை: ஐசிசி உலகக் கோப்பை டி20 தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது.இதில் டெக்சாஸ் நகரில் நடைபெற்ற 11வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி அமெரிக்கா அணியை எதிர்கொண்டது.இந்த போட்டியில் யாரும் எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது அமெரிக்க அணி. இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க கிரிக்கெட் அணி தற்போது பேசுப்பொருளாக மாறியுள்ளது. முன்னதாக கனடா அணியை அமெரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க கிரிக்கெட் அணி கடந்து வந்த பாதை: அமெரிக்கா தனது முதல் பிரதிநிதி அணியை 1844ஆம் ஆண்டு கனடாவுக்கு எதிரான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் களமிறக்கியது. இந்த போட்டி நியூயார்க்கில் உள்ள ப்ளூமிங்டேல் பூங்காவில் நடைப்பெற்றது.இப்போட்டியில் 20,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கு பெற்றனர்.அடுத்த 150 வருடங்களுக்கு அமெரிக்க தேசிய அணி மற்ற சர்வதேச அணிகளுக்கு எதிராக எப்போதாவது விளையாடி வந்தது.குறிப்பாக கனடாவுக்கு எதிராக வருடாந்திர ஆட்டி கோப்பை அல்லது அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் வரும் வெளிநாட்டு அணிகளுக்கு எதிராக மட்டும் விளையாடி வந்தது.
ஐசிசி அந்தஸ்து: பின்னர் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணியை, யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா கிரிக்கெட் அசோசியேஷனால் (யுஎஸ்ஏசிஏ) நிர்வகிக்கப்பட்டு வந்தது. 1965ல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐசிசி) அசோசியேட் உறுப்பினராக அங்கீகாரம் பெற்றது.இருப்பினும் ஜுன் 2017 இல், நிர்வாகம் மற்றும் நிதியளிப்பில் ஏற்பட்ட சிக்கல்களின் காரணமாக யுஎஸ்ஏசிஏ-வை ஐசிசி வெளியேற்றியது. இதன் காரணமாக யுஎஸ்ஏ கிரிக்கெட்டுக்கு இணை உறுப்பினர் பதவி வழங்கப்படும் வரை ஐசிசி அமெரிக்காஸ் அமைப்பு, அமெரிக்க அணியை தற்காலிகமாக மேற்பார்வையிட்டது. பின்னர் ஜனவரி 2019 இல், ஐசிசியின் அசோசியேட் உறுப்பினராக அதிகாரப்பூர்வமாக யுனைடெட் ஸ்டேட்ஸ் கிரிக்கெட் அணிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
முதல் சர்வதேச டி20 தொடர்: 1979ஆம் ஆண்டு, இப்போது உலகக் கோப்பை தகுதிச் சுற்று என அழைக்கப்படும் இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி டிராபியில் அமெரிக்கா அணி தனது சர்வதேசப் போட்டியில் அறிமுகமானது.பிறகு இரண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2004 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில் ஏப்ரல் 2018 இல், ஐசிசி அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் டி20 போட்டிகளில் பங்கேற்கும் சர்வதேச அந்தஸ்தை வழங்க முடிவு செய்தது. எனவே, ஜனவரி 1, 2019க்குப் பிறகு அமெரிக்காவிற்கும் மற்ற ஐசிசி உறுப்பினர்களுக்கும் இடையே நடைபெறும் அனைத்து இருபது 20 போட்டிகளும் டி20 அந்தஸ்தைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிராக மார்ச் 2019 இல் அமெரிக்கா அணி தனது முதல் டி20யை விளையாடியது.
அணியின் எழுச்சி: பின்னர் கோவிட் சிக்கல்களால் பெரும்பாலும் போட்டிகள் நடக்காத நிலையில் 2024 ஆம் ஆண்டு மே மாதம் வங்கதேச கிரிக்கெட் அணி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்தது. அவர்களுக்கு எதிராக முதல் முறையாக மூன்று டி20 போட்டிகளில் விளையாடியது.இதில் பெரும் அதிர்ச்சி தந்த அமெரிக்கா அணி தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதனை தொடர்ந்து இரண்டாவது ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.இதன் மூலம் ஐசிசியின் முழு உறுப்பினரான அணியை தோற்கடித்த பெருமையை பெற்றது.
இவ்வாறான தொடர் வெற்றிகளை தொடர்ந்து தற்போது டி20 உலகக்கோப்பை தொடருக்கான லீக் சுற்றில் விளையாடி வருகிறது.இதில் முதல் போட்டியிலேயே கனடாவை வீழ்த்தி அடுத்ததாக பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை சூப்பர் ஓவரில் வென்று சாதனை படைத்ததுள்ளது அமெரிக்கா.
இதையும் படிங்க: உலகக்கோப்பை டி20 2024: சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி அமெரிக்கா அசத்தல் வெற்றி! - T20 World Cup 2024