சென்னை: 17வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைப்பெற்ற எலிமினேட்டர் போட்டியில் (Eliminator) ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RR VS RCB) ஆகிய அணிகள் மோதின.டாஸ் வென்ற ஆர்.ஆர் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் அடித்தது.இதனையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19 ஓவரின் முடிவில் 4 விக்கெட் வித்தியாசத்தில் 174 ரன்கள் குவித்து போட்டியில் வெற்றி பெற்றது.இதையடுத்து, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள குவாலிஃபயர் 2ல் ஹைதராபாத் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து கொள்ளும்.
ஆர்சிபி அணியின் தோல்விக்கான காரணங்கள்:
பேட்டிங் சரிவு: இதனிடையே, இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறுவதற்கு மிக முக்கியமான எலிமினேட்டர் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தோல்விக்கான காரணம் என்று பார்த்தால், முதலில் பேட்டிங் செய்த அந்த அணி, 172 ரன்களை எடுத்தது. இதனை குறைவான ரன்கள் என்று சொல்வதற்கில்லை என்றாலும், ஒரு ப்ளே ஆஃப் சுற்றில் வெற்றி பெறுவதற்கு போதுமானதான ரன்களாக கருதப்பட முடியாது என்கின்றனர் விளையாட்டு விமர்சகர்கள்.
ஆர்சிபி அணி இன்னும் 20 அல்லது 30 ரன்கள் கூடுதலாக அடித்திருக்கலாம். அணியில் ஒரு பேட்ஸ்மேன்கூட ஐம்பது ரன்களை தாண்டாதது அந்த அணியின் ரசிகர்களுக்கு எமாற்றம் அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது.விராட் கோலி 33 ரன்கள், ராஜ் படிதர் 34 ரன்கள், லோம்ரோர் 32 ரன்கள் ஆகியவை மட்டுமே ஆர்சிபி அணி பேட்ஸ்மேன்கள் குவித்த அதிகபட்ச ரன்கள். இந்த அணியின் வில் ஜாக்ஸ் டி20 உலகக்கோப்பை தொடர் பயிற்சிக்காக இங்கிலாந்துக்கு சென்றது அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
ரன்களை வாரி வழங்கிய பெளலர்கள்: பந்துவீச்சை பொருத்தமட்டில் அணியின் முன்னணி பவுலரான சிராஜ் மட்டுமே 2 விக்கெட் வீழ்த்தி 33 ரன்கள் வழங்கினார்.கேமரூன் கிரீன் ஒரு விக்கெட் வீழ்த்தி 28 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஆனால், இவர் வீிசிய ஆட்டத்தின் 16 ஆவது ஓவரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 17 ரன்களை குவித்தது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. மேலும் சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்வப்னில் சிங், கரன் ஷர்மா ஆகியோருக்கு இரண்டு ஓவர்கள் மட்டுமே கொடுத்தார் டூபிளசிஸ். மைதானத்தில் பனிப்பொழிவு காணப்பட்டாலும் வேகப்பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கிய நிலையில் இவர்களுக்கு கூடுதலாக ஓவர்கள் கொடுத்திருக்கலாம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
சொதப்பல் பீல்டிங்: பீல்டிங்கை பொறுத்தவரை பவர்ப்ளேவில் மேக்ஸ்வெல் மற்றும் கேமரூன் க்ரீன் இரு கேட்ச்சுகளை தவறவிட்டனர். 30 பந்துகளில் 45 ரன்கள் அடித்து ராஜஸ்தான் வெற்றிக்கு அடித்தளமிட்ட ஜெய்ஸ்வாலின் கேட்ச்சை கேமரூன் க்ரீன் விட்டபோது, அவர் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அதேபோல பீல்டிங்கிலும் பல பந்துகளை பெங்களூரு அணி வீரர்கள் கோட்டைவிட்டனர். இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பையும் ஆர்சிபி கோட்டைவிட்டது.