ஐதராபாத் : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் நடந்த 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராக் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி, சென்னை வீரர்கள் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினர். இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு வெறும் 137 ரன்களை மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா மற்றும் துஸார் தேஷபாண்டே தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பந்துவீச்சு மட்டுமின்றி பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்ட ரவீந்திர ஜடேஜா இரண்டு அற்புதமான கேட்சுகளை பிடித்து அசத்தினார். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரவீந்திர ஜடேஜாவின் பிடித்த ஒட்டுமொத்த கேட்ச்சுகளின் எண்ணிக்கை 100ஆக உயர்ந்தது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 100 கேட்ச்களை பிடித்த இரண்டாவது சென்னை வீரர், ஒட்டுமொத்த அளவில் 4வது இந்திய வீரர் என்ற சிறப்பை ரவீந்திர ஜடேஜா பெற்றார்.
இதில் முதல் இடத்தில் ராயல் சேல்ஞசர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை 110 கேட்ச்களை பிடித்து உள்ளார். அவரைத் தொடர்ந்து சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா 109 கேட்ச்கள் பிடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.
மும்பை அணியின் கிரன் பொல்லார்ட் 103 கேட்ச் மற்றும் ரோகித் சர்மா 100 கேட்ச்கள் பிடித்து அடுத்தடுத்த வரிசையில் உள்ளனர். இந்நிலையில், 5வது வீரராக ரவீந்திர ஜடேஜா அந்த பட்டியலில் இணைந்து உள்ளார். 231 ஆட்டங்களில் விளையாடிய ரவீந்திர ஜடேஜா இந்த மைல்கல்லை எட்டி உள்ளார்.
அதேபோல் சென்னை அணியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சிறப்பையும் ரவீந்திர ஜடேஜா தன்னகத்தே வைத்து உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவெய்ன் பிராவோ 154 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா 135 விக்கெட்டுகள் வீழத்தி இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இதையும் படிங்க : CSK Vs KKR: சென்னை பந்துவீச்சில் சுருண்ட கொல்கத்தா! ஜடேஜா, தேஷ்பாண்டே அபாரம்! - IPL 2024