மும்பை: ரஞ்சி கோப்பையின் அரையிறுதிப் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு அணி, மும்பை அணியை எதிர்கொண்டு விளையாடி வருகின்றது. டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் சாய் கிஷோர், பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி களம் இறங்கி விளையாடிய தமிழ்நாடு அணியால், வெறும் 146 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்சன், பாபா இந்திரஜித் ஆகியோர் 0, 11 என்ற ரன்களுடன் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக விஜய் சங்கர் 44 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 43 ரன்களும் எடுத்தனர். இவர்களின் இந்த பங்களிப்பினாலேயே, தமிழ்நாடு அணி 140 ரன்களை நெருங்க முடிந்தது.
மும்பை அணி சார்பில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்களும், முஷீர் கான், தனுஷ் கோட்யான் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தினர். இதனைத் தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய மும்பை அணி, முதல் நாள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்தது.
இந்த நிலையில், இன்று (மார்ச் 3) இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் செய்த மும்பை அணியை, தனது சுழற்பந்து வீச்சால் தகர்த்தார், அணியின் கேப்டன் சாய் கிஷோர். முஷீர் கான் 55, மொஹித் அவஸ்தி 2, ரஹானே 19, ஹர்திக் தாமோர் 35 என அடுத்தடுத்து வெளியேறினர். தன்னை நிரூபித்துக் காட்ட களம் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும், வழக்கத்தை போல் ஷார்ட் பால்களுக்கு தடுமாறிய நிலையில், தனது விக்கெட்டை இழந்து 3 ரன்களில் வெளியேறினார்.
ஆனால், விரைவில் வீழ இருந்த மும்பை அணியை ஷர்துல் தாக்கூர் மற்றும் தனுஷ் கோட்யான் கூட்டணி மீட்டெடுத்தது. 100 ஸ்ட்ரைக் ரேட் குறையாமல் களத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஷர்துல் தாக்கூர், தனது சதத்தை பதிவு செய்த பின்னரே வெளியேறினார். அவர் குல்தீப் சேன் பந்து வீச்சில் ஜெகதீசனிடம் கேட்ச் கொடுத்து 109 ரன்களில் அட்டமிழந்தார்.
மறுமுனையில் இருந்த தனுஷ் கோட்யான் அரைசதத்தை பதிவு செய்ததுடன், தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். இரண்டாவது நாள் முடிவில், மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 353 ரன்கள் குவித்து, 207 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
தனுஷ் கோட்யான் 74 ரன்களுடனும், துஷார் தேஷ்பாண்டே 17 ரன்களுடனும் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர். தமிழ்நாடு அணி சார்பில் சாய் கிஷோர் 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். மற்ற பந்து வீச்சாளர்களான குல்தீப் சேன் 2 விக்கெட்களும், சந்தீப் வாரியர் 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். மேலும், முன்றாவது நாள் ஆட்டம் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாடு அணிக்கு எதிராகச் சொதப்பிய ஸ்ரேயாஸ் ஐயர்.. தட்டி தூக்கிய சந்தீப் வாரியர்!