ஐதராபாத்: பஞ்சாப் கிங்ஸ் அணியை பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா, தொழிலதிபர்கள் மொகித் புர்மன், நெஸ் வாடியா ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர். இவர்கள் மூவரிடமே பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிகப்படியான பங்குகள் உள்ளன. இந்நிலையில், சக உரிமையாளர்களில் ஒருவரான மொகித் புர்மன் மீது நடிகை பிரீத்தி ஜிந்தா சண்டிகர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில் பஞ்சாப் கிங்ஸ் அணி உரிமையாளர்களில் ஒருவரான மொகித் புர்மன் தனது பங்குகளை இதர முதலீட்டாளர்களிடம் விற்க திட்டமிட்டு உள்ளதாகவும், தனக்கு தெரிவிக்காமல் மொகித் புர்மன் பங்குகளை விற்க அனுமதிக்கக் கூடாது என்றும் பிரீத்தி ஜிந்தா சண்டிகர் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
அதேநேரம் பிரீத்தி ஜிந்தாவின் இந்த புகாருக்கு மொகித் புர்மன் மறுப்பு தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. தன்னிடம் உள்ள அணியின் பங்குகளை அவர் விற்க திட்டமிடவில்லை எனக் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரை உரிமையாளர்களில் ஒருவர் தனது பங்குகளை விற்க விரும்பினால் முதலில் அதை சக உரிமையாளர்களிடம் தெரிவிக்க வேண்டும்,
அப்படி சக உரிமையாளர்கள் பங்குகளை வாங்க விரும்பவில்லை என்கிற பட்சத்தில் வெளி முதலீட்டாளர்களிடம் பங்குகளை விற்கலாம் என ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி, மொகித் புர்மன் தனக்கு தெரிவிக்காமல் பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளதாக பிரீத்தி ஜிந்தா சண்டிகர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
யாராரிடம் எவ்வளவு பங்குகள்?
பஞ்சாப் கிங்ஸ் அணியில் பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தாவிடம் 23 சதவீத பங்குகள் உள்ளன. அதேபோல் தொழிலதிபர் மொகித் புர்மனிடம் 43 சதவீத பங்குகளும், மற்றொரு பங்குதாரர் நெஸ் வாடியாவிடன் 23 சதவீதமும், தொழிலதிபர் கரன் பவுல் என்பவரிடம் மீதமுள்ள பங்குகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரொனால்டோ வீட்டில் தோனி ஜெர்சி! தோனி ஃபேனா ரொனால்டோ! உண்மை என்ன? - MS Dhoni Jersey in Ronaldo house