பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 17வது பாராலிம்பிக் விளையாட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் வென்றார். T64 பிரிவில் கலந்து கொண்ட இந்திய வீரர் பிரவீன் குமார், 2.08 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார்.
உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவை சேர்ந்த 21 வயதே ஆன பிரவீன் குமார் பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் விளையாட்டில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார். முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டு ரியோ பாராலிம்பிக்ஸ் விளையாட்டில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்றார்.
2024 Paris Paralympics | Tokyo Silver medallist Praveen Kumar wins Gold medal with his personal best jump of 2.08m in Men's High Jump -T64 final event pic.twitter.com/KohrL6w4iM
— ANI (@ANI) September 6, 2024
தொடர்ந்து 2020 டோக்கியோ பாராலிம்பிக்ஸ் விளையாட்டில் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கமும் தற்போது பாரீஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டில் வெண்கலமும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவை சேர்ந்த Derek Loccident 2.06 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், உஸ்பெகிஸ்தானை சேர்ந்த Temurbek Giyazov 2.03 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
பிரவீன் குமார் வென்ற தங்கத்தையும் சேர்த்து நடப்பு பாரீஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடரில் இந்தியாவின் ஒட்டுமொத்த தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2020 டோக்கியோ பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடரில் இந்தியா 5 தங்கம் வென்ற நிலையில், தற்போது பாரீஸ் பாராலிம்பிக்ஸில் 6 தங்கம் வென்று முந்தையை சாதனையை இந்திய வீரர்கள் முறியடித்துள்ளனர்.
பிரவீன் குமார் தனது ஐந்து முயற்சிளிலும் சிறப்பாக செயல்பட்ட நிலையில், தனது முதல் முயற்சியிலேயே 2.08 மீட்டர் தூரம் தாண்டி சாதனை படைத்தார். அதேநேரம் உயரம் தாண்டுதல் T64 பிரிவில் 2.11 மீட்டர் உயரம் தாண்டியதே சாதனையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
பாரீஸ் பாராலிம்பிக்ஸ் தங்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் பட்டியல்:
அவனி லேகரா (துப்பாக்கிச் சுடுதல்): பெண்கள் R2 பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டென்டிங் SH1,
நிதேஷ் குமார் (பேட்மிண்டன்): ஆண்கள் ஒன்றையர் SL3,
சுமித் அன்டில் (தடகளம்): ஆடவர் ஈட்டி எறிதல் F64 பிரிவு,
ஹர்விந்தர் சிங் (வில்வித்தை): ஆண்டவர் தனிநபர் ரிகர்வ் ஓபன்,
தராம்பிர் (தடகளம்): ஆடவர் கிளப் த்ரோ F51
பிரவீன் குமார் (தடகளம்): ஆடவர் உயரம் தாண்டுதல் T64.
இதையும் படிங்க: இந்திய ரயில்வே பணியை கைவிட்ட வினேஷ் போகத்! இதுதான் காரணமா? - Vinesh Phogat Resign indian railway