மும்பை: புரோ கபடி 2024 தொடருக்கான வீரர்கள் ஏலம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ள நிலையில், மொத்தமாக இதுவரை 88 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக நடப்பு சாம்பியனான புனேரி பால்தான் அணி 12 வீரர்களை தக்கவைத்துள்ளது.
அதற்கு அடுத்த படியாக தமிழ் தலைவாஸ் அணி 11 வீரர்களை தக்க வைத்து உள்ளது. 2 முறை சாம்பியனான ஜெய்ப்பூர் மற்றும் குஜராத் அணிகள் தலா 5 வீரர்களை தக்க வைத்துள்ளன. மீதமுள்ள 212 இடங்களுக்கான வீரர்கள் ஏலம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். மும்பையில் நேற்று (ஆக.15) முதல் நாள் ஏலம் நடைபெற்றது.
முதல் நாளில் அதிகபட்சமாக சச்சின் தன்வர் 2 கோடியே 15 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனார். அவரை தமிழ் தலைவாஸ் அணி ஏலம் எடுத்தது. அவரைத் தொடர்ந்து ஈரான் வீரர் முகமதுரேசா ஷட்லூயி சியானேவை 2 கோடியே 7 லட்ச ரூபாய்க்கு ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி ஏலம் எடுத்தது. இதன் மூலம் புரோ கபடி வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன முதல் வெளிநாட்டு வீரர் என்ற சிறப்பை முகமதுரேசா ஷட்லூயி சியானே பெற்றார்.
மொத்தம் உள்ள 12 அணிகள் நேற்று முதல் நாளில் 20 வீரர்களை ஏலம் எடுத்தது. இதில் பெங்கால் வாரியர்ஸ், தெலுகு டைட்டன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் இறுதி ஏல தக்கவைப்பு முறை மூலம் மனிந்தர் சிங், பவன் செராவத் மற்றும் சோம்பிர் ஆகிய வீரர்களை தக்கவைத்துக் கொண்டது.
இதில் சச்சின், முகமதுரேசா ஷட்லூயி சியானே, குமான் சிங், பவன் செஹ்ராவத், பாரத், மனிந்தர் சிங், அஜிங்க்யா பவார் மற்றும் சுனில் குமார் ஆகியோர் 1 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போயினர். அதிக் சுனில் குமாரை 1 கோடியே 15 லட்ச ரூபாய்க்கு யு மும்பா அணி ஏலம் எடுத்தது. இதன் மூலம் புரோ கபடி வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன முதல் தடுப்பாட்டக்காரர் என்ற சிறப்பை சுனில் குமார் பெற்றார்.
மற்றபடி புரோ கபடி வரலாற்றில் அதிக ரெய்டு புள்ளிகளை தன்வசம் வைத்துள்ள பர்திப் நர்வல் 70 லட்ச ரூபாய்க்கு பெங்களூரு புல்ஸ் அணியும், சீனியர் வீரர் சுர்ஜித் சிங்கை 60 லட்ச ரூபாய்க்கு ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணியும் தக்கவைத்துக் கொண்டது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று புரோ கபடி ஏலம் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: "20 ஓவர் உலக கோப்பையை இந்தியா நடத்தாது"- ஜெய்ஷா கூற என்ன காரணம்? - Womens T20 World Cup 2024