கிர்திபுர் : நெதர்லாந்து, நமீபியா, நேபாளம் அணிகள் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன. இதில் நேபாளம் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் நமீபியா வீரர் ஜென் நிக்கோல் லோப்டி இடன் 33 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் அதிவேகமாக சதம் விளாசிய வீரர் என்ற சிறப்பை நமீபியா வீரர் பெற்றார்.
மொத்தம் 36 பந்துகளில் 101 ரன்கள் குவித்த ஜென் நிக்கோல், 11 பவுண்டரி, 8 சிக்சர்களை விளாசினார். இதில் 92 ரன்களை பவுண்டரி அடித்தே ஜென் நிக்கோல் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. 22 வயதான ஜென் நிக்கோல் நமீபியா அணிக்காக இதுவரை 33 டி20 மற்றும் 36 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
ஜென் நிக்கோலின் சதத்தை சேர்த்து நம்பீயா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய நேபாளம் அணி 19வது ஓவரில் 186 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. நமீபிய வீரர் ரூபன் டிரம்பிள்மென் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதற்கு முன் கடந்த ஆண்டு சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் நேபாளம் வீரர் குஷல் மல்லா 34 பந்துகளில் சதம் அடித்து இருந்தார். அதுவே இதுவரை சாதனையாக காணப்பட்டது. தற்போது அந்த சாதனையை நமீபியா வீரர் முறியடித்து உள்ளார்.
மற்றபடி இந்திய வீரர் ரோகித் சர்மா, தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் ஆகியோர் 35 பந்துகளில் சதம் விளாசியதே முந்தைய சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Ind Vs Eng 4th Test: இந்தியா அபார வெற்றி! தொடரையும் கைப்பற்றியது!