மும்பை : நடப்பாண்டுக்கான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடர் கிளைமேக்ஸ் காட்சிகளை நெருங்கி உள்ளது. மும்பையில் கடந்த மார்ச் 2ஆம் தேதி தொடங்கிய 2வது அரைஇறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு - மும்பை அணிகள் மோதிக் கொண்டன. டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதல் இன்னிங்சில் படுமோசமாக விளையாடி தமிழ்நாடு அணி 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சரணடைந்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி ஷர்துல் தாக்கூரின் 109 ரன் அபார சதத்தின் உதவுயுடன் முதல் இன்னிங்சில் 378 ரன்கள் குவித்தது. கடைசி கட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஷர்துல் தாக்கூர் (109 ரன்), தனுஷ் கோடியன் (89 ரன்) அணி கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினர்.
அதேநேரம் தமிழ்நாடு அணியில் கேப்டன் சாய் கிஷோர் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை அள்ளினார். தொடர்து இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய தமிழ்நாடு அணி வீரர்கள், மும்பை பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
சொல்லிக் கொள்ளும் வகையில் பாபா அபராஜித் (70 ரன்) மட்டும் ஓரளவுக்கு நன்றாக விளையாடினார். மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து விக்கெட் அணிவகுப்பு நடத்தினர். முடிவில் 51 புள்ளி 5 ஓவர்களில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் தமிழ்நாடு அணி இழந்தது.
இதனால் மும்பை அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை அணியில் ஷாம்ஸ் முலானி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி நடப்பு சீசனுக்கான ரஞ்சிக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.
மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் விதர்பா - மத்திய பிரதேச அணிகள் விளையாடி வருகின்றன. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் விதர்பா அணி 261 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து விளையாடி வருகிறது. மத்திய பிரதேசம் அல்லது விதர்பா ஆகிய இரண்டு அணிகளில் ஒன்று வரும் மார்ச் 10ஆம் தேதி தொடரும் மும்பை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் களமிறங்கும்.
இதையும் படிங்க : சிஎஸ்கேவுக்கு திடீர் சிக்கல்! டிவோன் கான்வே திடீர் விலகல்? என்ன திட்டம்?