மும்பை: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு சீசன் கிளைமாக்ஸ் காட்சியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், பிளே ஆப் சுற்றில் தொடர ஒவ்வொரு அணிகளும் கடுமையாக விளையாடி வருகின்றன.
இதில், இன்று (மே.6) இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 55வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறிய நிலையில், இனி வரும் ஆட்டங்களில் அந்த அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டிய அவசியமில்லை. அதேநேரம் அந்த அணி போட்டியின் தன்மையை மாற்றக் கூடும். சில ஆட்டங்களில் அந்த அணி வெற்றி பெறும் பட்சத்தில் அதனால் தோல்வி அடையும் அணியோ அல்லது மற்ற அணியின் பிளே ஆப் வாய்ப்போ பறிபோகலாம்.
நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 11 போட்டிகளில் 8 ஆட்டங்களில் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதேநேரம் சன்ரைசஸ் ஐதராபாத் அணி விளையாடிய 10 ஆட்டங்களில் 6ல் வெற்றியும், 4ல் தோல்வியும் கண்டு புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து 4வது இடத்தில் ஐதராபாத் அணியால் தொடர முடியும். அதேநேரம் சொந்த மண்ணில் நடக்கும் ஆட்டம் என்பதால் மும்பை அணி கடுமையாக ஆதிக்கம் செலுத்தும். வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக விளையாடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த சீசனில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுவது 2வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிக்கான இரு அணி வீரர்கள் பட்டியல்:
மும்பை இந்தியன்ஸ்: இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா, நமன் திர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், அன்ஷுல் கம்போஜ், பியூஷ் சாவ்லா, ஜஸ்பிரித் பும்ரா, நுவான் துஷாரா.
சன்ரைசஸ் ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, மயங்க் அகர்வால், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத். ஷாபாஸ் அகமது, மார்கோ ஜான்சன், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், நடராஜன்.
இதையும் படிங்க: ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்! அமலாக்கத்துறை கைது எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு! என்ன திட்டம்? - Hemant Soren Released