மும்பை : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.7) பிற்பகல் 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 20வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பன்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 49 ரன்கள், இஷான் கிஷான் 42 ரன் என அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
கடைசி கட்டத்தில் டிம் டேவிட் 45 ரன், ரோமாரியோ ஷெப்பர்ட் 39 ரன்கள் குவித்து அணி 234 ரன்களை எட்ட உதவினர். தொடர்ந்து 235 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி டெல்லி கேபிட்டல்ஸ் அணி விளையாட தொடங்கியது. டெல்லி அணியின் இன்னிங்சை பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் தொடங்கினர்.
டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 10 ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினார். இதையடுத்து களமிறங்கிய அபிஷேக் போரல், மற்றொரு தொடக்க வீரர் பிரித்வி ஷாவுடன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார்.
மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த இருவரும் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அபாரமாக விளையாடிய பிரித்வி ஷா 66 ரன்கள் குவித்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் போல்ட்டாகி வெளியேறினார். சீரான இடைவெளியில் டெல்லி அணியின் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடிக் கொண்டு இருந்தார்.
மறுமுனையில் கேப்டன் ரிஷப் பன்ட் 1 ரன், அக்சர் பட்டேல் 8 ரன், லலித் யாதவ் 3 ரன், குமார் குஷாகரா டக் அவுட் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து விக்கெட் அணிவகுப்பு நடத்தினர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு டெல்லி அணியால் 205 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதி வரை போராடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 71 ரன்கள் அடித்து களத்தில் நின்றார்.
இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி பெற்ற முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை அணி தரப்பில் ஜெரால் கோட்சே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பும்ரா இரண்டு விக்கெட்டும், ரோமாரியோ ஷெப்பர்ட் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையும் படிங்க : IPL 2024: டெல்லி அணிக்கு எதிராக ஆயிரம் ரன்கள் குவிப்பு - ரோகித் சர்மா புது சாதனை! - Rohit Sharma 1000 Runs