ஜெய்ப்பூர் : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.22) இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் தொடங்கிய 38வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ரோகித் சர்மா, இஷான் கிஷான் ஆகியோர் மும்பை அணியின் இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ரோகித் சர்மா 6 ரன்கள் மட்டும் அடித்து வந்த வேகத்தில் நடையை கட்டினார்.
அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிஷன், சந்தீப் சர்மா பந்தில் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவும் இந்த முறை பெரிய அளவில் சோபிக்கவில்லை. அதே சந்தீப் சர்மா பந்துவீச்சில் 10 ரன்கள் மட்டும் எடுத்து சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருக்க, திலக் வர்மா மட்டும் அணியை மீட்க போராடினார். அவருக்கு உறுதுணையாக முகமது நபி 23 ரன், நேஹால் வதேரா 49 ரன் ஆகியோர் தங்கள் பங்குக்கு ரன்கள் குவித்து வெளியேறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஹர்திக் பாண்டியா இந்த முறையும் சொதப்பினார்.
வெறும் 10 ரன்கள் மட்டும் எடுத்து ஹர்திக் பாண்டியா ஏமாற்றம் அளித்தார். கடைசி வரை போராடிக் கொண்டு இருந்த திலக் வர்மாவும் இறுதி ஓவரில் ஆட்டமிழந்தார். சந்தீப் சர்மாவின் பந்தில் திலக் வர்மா 65 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். தனது நேர்த்தியான பந்துவீச்சின் மூலம் மும்பை அணி வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்த சந்தீப் சர்மா கடைசி ஓவரில் மட்டும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டிம் டேவிட் (3 ரன்), ஜெரால்ட் கோட்சே (0) ஆகியோர் அடுத்தடுத்து சந்தீப் சர்மாவின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆட்டமிழந்து வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. பியூஷ் சாவ்லா 1 ரன்னும், ஜஸ்பிரித் பும்ரா 2 ரன்களும் எடுத்து களத்தில் நின்றனர்.
அபாரமாக பந்துவீசிய சந்தீப் சர்மா 4 ஓவர்களில் வெறும் 18 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து மும்பை அணியின் 5 முன்னணி விக்கெட்டுகளை காலி செய்தார். டிரென்ட் பவுல்ட் 2 விக்கெட்டும், அவேஷ் கான், யுஸ்வேந்திர சஹல் ஆகியோர் தலா 1 விக்கெடும் வீழ்த்தினர். முன்னதாக முகம்து நபியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை யுஸ்வேந்திர சஹல் எட்டினார். 180 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது.
இதையும் படிங்க : "தோல்வியால் துவளவில்லை" கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் குகேஷின் வெற்றி ரகசியம் - Indian Grandmaster Gukesh