ஐதராபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேசிய தேர்வு குழு தலைவர் முகமது யூசுப், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக முகமது யூசுப் அறிவித்துள்ளார். இது குறித்து முகமது யூசுப் வெளியிட்ட பதிவில், தனிப்பட்ட காரணங்களுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வு குழு தலைவர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்.
உலகின் சிறந்த அணிகளில் ஒன்றான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக பணியாற்றியதை பெருமைமிகு தருணமாக கருதுகிறேன். பாகிஸ்தான் கிரிக்கெட்டின் வளர்ச்சி மற்றும் வெற்றியில் பங்காற்றியதை பெருமையாக எண்ணுகிறேன் என்று அந்த பதிவில் முகமது யூசுப் தெரிவித்துள்ளார்.
முகமது யூசுப் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பதவி வகித்துள்ளார். அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் முகமது யூசுப் வகித்துள்ளார். முகமது யூசுப்புடன் சேர்த்து மற்றொரு முன்னாள் டெஸ்ட் வீரர் அசாத் ஷபீக் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தேர்வு குழு உறுப்பினர்களாக பதவி வகித்தனர்.
பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும், 19 வயதுக்கு உட்பட்ட பாகிஸ்தான் தேசிய அணியின் தலைமை பயிற்சியாளராகவும் முகமது யூசுப் பதவி வகித்துள்ளார். முன்னதாக அண்மையில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி எதிர்பார்த்த அளவில் விளையாடவில்லை.
அதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள் மாற்றியமைக்கப்பட்டனர். அது முதலே முகமது யூசுப் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தேர்வு குழு தலைவர் பதவியில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக முகமது யூசுப் பதவி விலகி இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இதையும் படிங்க: Right To Match விதியில் அன்கேப்டு பிளேயராகும் வீரர்கள் யாரார்? பட்டியலில் தமிழக வீரருக்கும் இடம்! - 2025 IPL Uncapped Players List