நைரோபி (கென்யா): உலகின் நம்பர் ஒன் மாரத்தான் வீரரான கென்யாவைச் சேர்ந்த, கெல்வின் கிப்டம் தனது பயிற்சியாளர் கெர்வைஸ் ஹக்கிசிமானா உடன், நேற்று கென்யாவின் எல்டோரெட் - கப்டகாட் சாலையில் காரில் சென்றுக் கொண்டு இருக்கும் போது நடந்த சாலை விபத்தில் இருவரும் பலியானார்கள்.
இதனை கென்யா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் கிடியோன் குமையோ உறுதி செய்தார், இதன் பிறகுதான் இந்த செய்தி உலகிற்குத் தெரிய வந்துள்ளது. 24 வயதான கிப்டம் சிகாகோ மாரத்தான் போட்டியில் 2 மணி நேரம் ஒரு நிமிடம் 35 வினாடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்தார்.
இதனைத் தொடர்ந்து லண்டனில் நடந்த மாரத்தானில் 2 மணி நேரம் ஒரு நிமிடம் 25 வினாடிகளில் கடந்து தன்னுடைய சாதனையைத் தானே முறியடித்தார். இதன் மூலம் உலகின் நம்பர் ஒன் மாரத்தான் வீரர் என்ற சாதனைக்கு செந்தக்காரர ஆனர் கெல்வின் கிப்டம்.
இவர் வரவிருக்கும் ஏப்ரல் மாதம் ரோட்டர்டாம் மாரத்தானில் பங்கேற்பதற்காகத் தீவிரமாகப் பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் அவரது மறைவு விளையாட்டு உலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அவரது மறைவிற்குப் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்துவருகின்றனர். இது குறித்து கென்யா விளையாட்டு அமைச்சர் அபாபு நம்வாம்பா தனது எக்ஸ் தளத்தில், ''பேரழிவு தரும் வகையில் வலி ஏற்பட்டுள்ளது. கென்யா ஒரு சிறப்பு ரத்தினத்தை இழந்துவிட்டது. வருத்தத்தைப் பகிர்ந்து கொள்ள வார்த்தைகள் இல்லை'' என்று பதிவிட்டுள்ளார்.
கென்யாவின் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரைலா ஒடிங்கா தனது பதிவில், ''நாடு ஒரு உண்மையான கதாநாயகனை இழந்துவிட்டது'' என்று பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக உலக தடகளத் தலைவர் செப் கோ கூறுகையில், “கெல்வின் கிப்டம் மற்றும் அவரது பயிற்சியாளர் கெர்வைஸ் ஹக்கிசிமானாவின் இழப்பை அறிந்து நாங்கள் அதிர்ச்சியும், ஆழ்ந்த வருத்தமும் அடைந்துள்ளோம்.
சிகாகோவில் கெல்வின் தனது அசாதாரண மாரத்தான் உலக சாதனையை படைத்தபோது, அவருடைய வரலாற்றுச் சாதனையை நான்தான் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தேன். நம்பமுடியாத சாதனைக்குச் சொந்தக்காரரான இளம் தடகள வீரர் நம்மை விட்டுச் செல்வதை பெரும் இழப்பாகக் கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் வெளியீடு: ஆட்சியை பிடிக்க இம்ரான், நவாஸ் தீவிரம்! யாருக்கு வெற்றி?