பாரிஸ்: ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டிகள் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன. இதில் 32 விளையாட்டுகளில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் இந்தியாவின் சார்பாக மட்டும் மொத்தம் 16 பிரிவுகளில் 117 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நேற்று இரவு வீரர்கள் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கை என ஒலிம்பிக் தொடக்க விழா களைகட்டிய நிலையில் இன்று ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இந்திய வீரர் லக்சயா சென் மற்றும் கவுதமாலா நாட்டைச் சேர்ந்த கெவின் கோர்டான் ஆகியோர் மோதினர்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் 21-8 என்ற கணக்கில் கெவின் முன்னிலை வகித்தார். அதற்கு அடுத்த செட்டில் இறுதிவரை கடுமையாக போராடிய லக்சயா சென் 22-20 என்ற கணக்கில் கெவினை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இன்று நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை மகளிருக்கான 10மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது.
இதில் இந்தியாவின் சார்பாக மனுபாக்கர் மற்றும் ரிதம் சிங்வான் ஆகியோர் களமிறங்கினர். இவர்களில் ரிதம் சங்வான் 573 புள்ளிகள் பெற்று 15வது இடத்தை மட்டுமே அவரால் பெற முடிந்தது. இதனால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார். இருப்பினும், தொடக்கம் முதலே முன்னிலை வகித்த மனு பாக்கர் 60 ஷாட்டுகள் கொண்ட தகுதிச் சுற்றில் 580 புள்ளிகளைப் பெற்று 3வது இடத்தில் போட்டியை நிறைவு செய்தார். இதன் மூலம் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மேலும், இன்று துடுப்புப்படகு ரோவிங் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் பால்ராஜ் பன்வார் உடன் 6 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் இந்திய வீரரான பால்ராஜ் பன்வார் தொடக்கத்தில் முதலாவதாக வந்தபோதிலும், இறுதியில் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இவர் 7:07:11 வினாடிகளில் இலக்கு தூரத்தைச் சென்றடைந்து நான்காவது இடத்தை பிடித்துள்ளார். பல்ராஜ் பன்வார் 4ஆம் இடம் பிடித்ததால் தகுதிச் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளார். இந்நிலையில், தகுதிச் சுற்றுக்கான வாய்ப்பை பெற நாளை நடைபெறும் ரெபகேஜ் சுற்றில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: முதல் பதக்கம் வெல்லும் முனைப்பில் இந்தியா.. மனு பாக்கர் இறுதிச்சுற்றுக்கு தகுதி!