ஐதராபாத்: கிரிக்கெட் வீரராக எங்கு எல்லாம் அனுப்பப்படுகிறோமோ அங்கு எல்லாம் விளையாடுவோம் என்றும் இதற்கு முன் தான் பாகிஸ்தான் சென்றது இல்லை என்பதால் அங்கு விளையாடுவதை எதிர்நோக்கி ஆர்வமாக உள்ளேன் என்றும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. பாகிஸ்தானில் தொடர் நடைபெறுவதால் பாதுகாப்பு காரணங்கள் கருதி இந்திய அணி அங்கு சென்று விளையாடுவது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. அரசு அனுமதி வழங்கினால் பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாடுவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என பிசிசிஐ தெரிவித்து உள்ளது.
இதற்கு முன் கடந்த 2023ஆம் ஆண்டு இதேபோல் பாகிஸ்தானின் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்ற போது பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா அங்கு சென்று விளையாடவில்லை. மாறாக இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் ஹைபிரிட் முறையில் இலங்கையில் நடைபெற்றனர்.
இருப்பினும், இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 2008ஆம் ஆண்டு நடைபெற்று இலங்கை வீரர்களுக்கு நேர்ந்த சம்பவம் மற்றும் இரு நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக நடைபெற்று வரும் மோதல் போக்கு உள்ளிட்ட காரணங்களால் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருதி இந்தியா அங்கு சென்று விளையாடுவதை தவிர்த்து வருகிறது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே இரு தரப்பு கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்றும் ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் செல்ல விரும்புவதாகவும் அங்கு சென்று கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் விளையாடுவேன் என்றும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய குல்தீப் யாதவ், "கிரிக்கெட் வீரர்களாக எங்கு விளையாட அனுப்பப்படுகிறோமோ, அங்கு சென்று விளையாட வேண்டும் என்றும் இதற்கு முன் பாகிஸ்தான் சென்றிராததால் அங்கு சென்று விளையாட ஆர்வமாக இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மக்கள் அனைவரும் சிறந்தவர்கள், வாய்ப்பு கிடைக்கும் போது கண்டிப்பாக அங்கு சென்று விளையாடுவோம் என்று குல்தீப் யாதவ் கூறினார்.
இதையும் படிங்க: விராட் கோலியின் விலையுயர்ந்த வாட்ச்கள்! ஒவ்வொன்னும் இத்தனை கோடியா? - Virat Kohli Expensive Watches