சென்னை: ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா அணியும் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தனது அணி பேட்டிங்கில் பலம் என்பதாலும், இந்த சீசனின் பல போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்தே வெற்றி பெற்றனர் என்பதாலும் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆனால், அந்த அணி நினைத்தது போல் போட்டி இல்லாமல் கொல்கத்தா அணியின் பக்கமே சென்றது. கொல்கத்தா அணி போட்டி முழுக்க ஆதிக்கம் செலுத்தியது. லீக் போட்டிகளில் வெறும் 12 விக்கெட்களை எடுத்த ஸ்டார்க், பிளே ஆஃப் சுற்றில் விஸ்வரூபம் எடுத்து, 2 போட்டிகளில் 5 விக்கெட்களை எடுத்து கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார்.
தொடக்க வீரர்களாக வழக்கம் போல் டிரவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களம் இறங்கினர். லீக் ஆட்டங்களில் சிறப்பான தொடக்கத்தைக் கொடுக்க முடிந்த இந்த கூட்டணியால், பிளே ஆஃப்-ல் சோபிக்க முடியவில்லை. இப்போட்டியிலும் ஹெட் 0, அபிஷேக் சர்மா 3 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து திரிபாதி 9, நிதீஷ் குமார் 13, மார்க்ரம் 20, சபாஷ் அகமத் 8 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து, அப்துல் சமாத் இம்பக்ட் வீரராக களம் இறக்கப்பட்டார். ஆனால், அவரும் 4 ரன்களில் ஆட்டமிழக்க, அதன் பின்னர் பேட் கம்மின்ஸ் மற்றும் கிளாசெனும் 16 ரன்களில் வெளியேறினர்.
மிட்செல் ஸ்டார்க் தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி அடித்தளம் போட, அதனைத் தொடர்ந்து ரசல் 3 விக்கெட்களும், ஹர்ஷித் ராணா விக்கெட்களையும் எடுத்து கிட்டத்தட்ட வெற்றியை கொல்கத்தா பக்கம் உறுதி செய்தனர். இதனால் ஹைதராபாத் அணி 113 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்த ஸ்கோர் வந்ததற்கே இறுதியில் பேட் கம்மின்ஸ் அடித்த ஒரு சிக்சர், 2 பவுண்டரிகள் தான் காரணம்.
இதனைத் தொடர்ந்து, கொல்கத்தா அணி 114 ரன்களை துரத்தியது. எவ்வித சிரமமும் இன்றி 10.4 ஓவர்களிலேயே கொல்கத்தா அணி இந்த இலக்கை துரத்தி வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணியால் 2 விக்கெட்டை மட்டுமே எடுக்க முடிந்தது. முதலில் சுனில் நரைன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து, வெங்கடேஷ் ஐயர் மற்றும் குர்பாஸ் அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றனர். வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். போட்டி முழுக்க ஆதிக்கம் செலுத்திய கொல்கத்தா அணி, 3வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது. முன்னதாக 2012, 2014ஆம் ஆண்டுகளில் கோப்பையைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கொளத்தூர் மணி பரபரப்பு புகார்! - KOLATHUR MANI