ஐதராபாத்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி டெஸ்ட் வீரர்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் கஜிசோ ரபடா டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். வங்கதேச அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தியதை தொடர்ந்து தரவரிசையில் ரபடா அதிரடி ஏற்றத்தை கண்டுள்ளார்.
இந்திய வேகப்பந்து வீரர் ஜஸ்பிரீத் பும்ரா 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஜோஸ் ஹாசில்வுட் உள்ளார். முதல் முறையாக பாகிஸ்தான் வீரர் நொமன் அலி டாப் 10 தரவரிசையில் நுழைந்துள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியதை தொடர்ந்து அவர் 9வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய சுழல் மன்னன் ரவிச்சந்திரன் அஸ்வின் 4வது இடத்தை பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் 5வது இடத்தில் நீடிக்கிறார். அதேபோல் இந்தியாவுக்கு எதிரான கடந்த புனே டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னர் 30 இடங்கள் முன்னேறி முதல் முறையாக 44வது இடத்திற்கு முன்னேறினார்.
New World No.1 🥇
— ICC (@ICC) October 30, 2024
South Africa's star pacer dethrones Jasprit Bumrah to claim the top spot in the ICC Men's Test Bowling Rankings 👇https://t.co/oljRIUhc5T
இந்தியாவுக்கு எதிரான புனே டெஸ்ட் போட்டியில் அபாரமாக பந்துவீசிய மிட்செல் சான்ட்னர் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மொத்தம் அந்த டெஸ்ட் போட்டியில் மிட்செல் சான்ட்னர் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. பேட்ஸ்மேன்கள் தரவரிசையை பொறுத்தவரை இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 1 இடம் முன்னேற்றம் கண்டு 790 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்துள்ளார்.
இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 903 புள்ளிக்ளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். அவரைத் தொடர்ந்து நியூசிலாந்து முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் 813 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். மற்ற இந்திய வீரர்கள் ரிஷப் பன்ட் 5 இடங்களையும், விராட் கோலி 6 இடங்களையும் இழந்து டாப் 10 பட்டியலை விட்டு வெளியேறினர்.
விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் 11வது இடத்திலும், விராட் கோலி 14வது இடத்திலும் தொடருகின்றனர். மற்ற இந்திய வீரர்கள் யாரும் டாப் 15 இடங்களுக்குள் இடம் பெறவில்லை. அண்மையில் இங்கிலாந்து டெஸ்ட்டில் சதம் விளாசிய பாகிஸ்தான் வீரர் சவுத் ஷாகீல் (7வது இடம்) அதிரடியாக 20 இடங்கள் முன்னேற்றம் கண்டு டாப் 10 வரிசையில் இடம் பிடித்துள்ளார்.
அதேபோல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் நியூசிலாந்து நட்சத்திர வீரர் ரச்சின் ரவீந்திரா 8 இடங்கள் முன்னேற்றம் கண்டு 10வது இடத்தில் உள்ளார்.
இதையும் படிங்க: ஐபிஎல் அணிகளில் இருந்து விலகும் 2 கேப்டன்கள்! யாரார் தெரியுமா?