ஐதராபாத்: கடந்த சுதந்திர தினத்தன்று கால்பந்து வீரர் ரொனால்டோ வீடியோ ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். அந்த வீடியோவில், ரொனால்டோ வீட்டு சுவற்றில் கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனியின் 7ஆம் நம்பர் பொறித்த ஜெர்சி இருந்தது. இதைக் கண்ட ரசிகர்கள், ரொனால்டோ, எம்எஸ் தோனியின் ரசிகரா என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.
— Cristiano Ronaldo (@Cristiano) August 15, 2024
மேலும், ரொனால்டோ வீட்டில் தோனியின் ஜெர்சி எப்படி?, ரொனல்டோவுக்கு தனது ஜெர்சியை தோனி பரிசளித்தாரா? என்ற கேள்விகளை நெட்டிசன்கள் தொடர்ந்து எழுப்பி வந்தனர். சமூக வலைதளத்தில் ரொனால்டோவின் வீடியோ வைரலாக பரவியது. இந்நிலையில், ரொனால்டோ வீட்டில் 7ஆம் நம்பர் ஜெர்சி எப்படி சென்றது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
ரொனால்டோ வீட்டில் இருக்கும் 7ஆம் நம்பர் ஜெர்சி தோனிக்கு சொந்தமானது அல்ல எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுவற்றில் தொங்கவிடப்பட்டு இருக்கும் ஜெர்சியில் கால்பந்து சின்னம் பொறிக்கப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது. மேலும் கடந்த 20 ஆண்டுகளாக ரொனால்டோவும் 7ஆம் நம்பர் பொறித்த ஜெர்சியையே பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
2023ஆம் ஆண்டு Al-Nassr அணியுடன் ஒப்பந்தம் கையெழுத்திட்ட போதும், ரொனால்டோ 7ஆம் நம்பர் ஜெர்சியை பயன்படுத்தி வருகிறார். வீடியோவில் அவருக்கு பின்னால் இருக்கும் 7ஆம் நம்பர் ஜெர்சியும் Al-Nassr அணியினுடையது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2003 முதல் 2009 வரை மான்செஸ்டர் யுனைட்டெட் அணிக்காக விளையாடிய ரொனால்டோ அப்போதும் 7ஆம் நம்பர் ஜெர்சியை பயன்படுத்தி வந்தார்.
முன்னதாக ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய போது 9ஆம் நமபர் ஜெர்சியை அணிந்து இருந்தார். அதன்பின் ஜூவென்டஸ் அணியில் இணைந்த ரொனால்டோ மீண்டும் 7ஆம் நம்பர் ஜெர்சிக்கு மாறினார். பின்னர் 2021ஆம் ஆண்டு மான்செஸ்டர் அணியில் ஒப்பந்தம் போட்டுக் கொண்ட ரொனால்டோ தொடர்ந்து 7ஆம் நம்பர் ஜெர்சியை பயன்படுத்தி வருகிறார்.
2023ஆம் ஆண்டு மான்செஸ்டர் அணியில் இருந்து விலகி Al-Nassr அணியில் இணைந்த போது அதே 7ஆம் நம்பர் கொண்ட ஜெர்சியை ரொனால்டோ தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். அதேநேரம், தோனி முதல் தர கிரிக்கெட், ஐபிஎல் போட்டிகள், சர்வதேச கிரிக்கெட் என அனைத்திலும் 7ஆம் நம்பர் ஜெர்சியை பயன்படுத்தி வருகிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்ற பிறகு பிசிசிஐ 7ஆம் நம்பருக்கு ஓய்வு அளித்தது. இனி இந்திய அணியில் எந்த வீரரும் 7ஆம் நம்பரை தங்களது ஜெர்சிக்கு பின்னால் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆனந்தக் கண்ணீர் கடலில் வினேஷ் போகத்! காரில் ஏற்றி ஊர்வலமாக அழைத்து சென்று கொண்டாடிய ரசிகர்கள்! - VINESH PHOGAT