ஐதராபாத்: x 2025- 27 ஐபிஎல் சீசன்களுக்கான விதிமுறை பட்டியலை பிசிசிஐ நிர்வாகம் வெளியிட்டது. இதில் எந்த தடவையும் இல்லாத வகையில் வெளிநாட்டு வீரர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் விதிகள் மாற்றியமைக்கப்பட்டு உள்ளன. புதிய விதிமுறைகளால் வெளிநாட்டு வீரர்கள் பலரும் பிசிசிஐ நிர்வாகம் மீது கடும் அதிருப்திக்கு உள்ளாகினர்.
அடிப்படை ஊதியம்:
குறிப்பாக ஏலத்தில் ஒரு அணியால் எடுக்கப்பட்ட பின்னர், அந்த சீசனில் விளையாடாத வீரர்களை அடுத்த இரண்டு ஐபிஎல் சீசன்களுக்கு தடை செய்யும் முடிவு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் முறையாக பதிவு செய்யாத வெளிநாட்டு வீரர்களையும் இரண்டு சீசன்களுக்கு தடை விதிக்க ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்து இருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
அதேபோல், ஒரு வெளிநாட்டு வீரர் அதிக தொகைக்கு ஏலம் போகும் பட்சத்தில் அவருக்கு நிலையான ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு மீதமுள்ள தொகையை பிசிசிஐ-யை எடுத்துக் கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விதி 2026ஆம் ஆண்டு ஐபிஎல் மினி ஏலம் முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு ஆண்டுகள் தடைக்கு என்ன காரணம்?
இந்த விதிமுறைகள் குறித்து பேசிய ஐபிஎல் தலைவர் அருண் துமால், ஒரு வீரர் 18 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போகும் நிலையில் அவருக்கு அடிப்படை ஊதியமாக 18 கோடி ரூபாயே நிர்ணயம் செய்யப்பட்டு மீதமுள்ள தொகை பிசிசிஐ-யை சென்றடையும். அது வீரர்களின் நலன்களுக்காகவும், மேலும் பல வீரர்களை ஏலத்தில் கலந்து கொள்ள ஊக்கப்படுத்தும் வகையிலும் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
அதேபோல், ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் போனால் 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படுவது குறித்து பேசிய அருண் துமால், சில வெளிநாட்டு வீரர்கள் மெகா ஏலம் மூலம் அதிக தொகைக்கு ஏலம் போகலாம் எனக் கருதி மினி ஏலத்தில் எடுக்கப்படும் அணிகளில் விளையாடாமல் தவிர்ப்பதாக கிடைத்த தகவலை அடுத்து புதிய விதிமுறைகளை கொண்டு வந்ததாக அவர் கூறினார்.
வெளிநாட்டு வீரர்களின் சூட்சமம் என்ன?:
ஐபிஎல் கிரிக்கெட்டில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மெகா ஏலம் நடைபெறுகிறது. முந்தைய ஐபிஎல் விதிமுறைகளின் படி ஒரு அணியால் மெகா ஏலத்தில் 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும். இதனால் சில வீரர்களை ஏலத்தில் விட்டு மீண்டும் அணிகள் தக்கவைக்கின்றன. இதில் குறிப்பிட்ட வீரரின் ஊதியம் அதிகரிக்கும்.
இதன் காரணமாக மினி ஏலத்தில் கலந்து கொள்ளாமல், மெகா ஏலத்தை வெளிநாட்டு வீரர்கள் எதிர்நோக்குவதாக தகவல் கூறப்படுகிறது. அதேநேரம் தற்போதைய ஐபிஎல் விதியின் கீழ் ஒரு அணி அதிகபட்சம் 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதிக்கப்படுகின்றன. இதனால் வெளிநாட்டு வீரர்களுக்கு கடும் நெருக்கடி உருவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ரூபிக் கியூப்பில் கின்னஸ் சாதனை! அசத்தும் மாணவர்! - Rubik Cube Guinness Record