டெல்லி : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. சென்னையில் மார்ச் 22ஆம் தேதி நடைபெறும் முதலாவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் மக்களவை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை நேற்று (மார்ச்.16) இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மொத்தம் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. ஜூன் 1ஆம் தேதி மக்களவை தேர்தல், 4 மாநில சட்டப் பேரவை தேர்தல்கள் நிறைவு பெறுகின்றன.
வாக்கு எண்ணிக்கை ஜுன் 4ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். மக்களவை தேர்தல் நடைபெறுவதால் இந்த முறை ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவதாக செய்திகள் பரவின. இது தொடர்பாக வீரர்கள் தங்களது பாஸ்போர்ட்களை அணி நிர்வாகத்திடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் பரவின.
இதை முற்றிலும் மறுத்து உள்ள இந்திய கிரிக்கெட் கவுன்சில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, நடப்பு சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் இந்தியாவிலேயே நடைபெறும் என தெரிவித்து உள்ளார். மார்ச் 22ஆம் தேதி முதல் ஏப்ரல் 7ஆம் தேதி வரையிலான ஐபிஎல் போட்டிகள் அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டு உள்ள நிலையில், மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்படும் என ஜெய் ஷா தெரிவித்து உள்ளார்.
முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது ஒட்டுமொத்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளும் இந்தியாவிலேயே நடத்தப்பட்டது போல் இந்த முறையும் அனைத்து போட்டிகளும் உள்நாட்டிலேயே நடத்தப்படும் என்றும், முதல் கட்ட போட்டி அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில், மக்களவை தேர்தல் தேதிகளை பொறுத்து மற்ற போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்படும் என ஜெய் ஷா தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்! குஜராத் பல்கலைக்கழகத்தில் என்ன நடந்தது?