சென்னை: நடப்பு ஐபிஎல் தொடரின் 49 வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த போட்டியானது நடைபெறவுள்ளது.
இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 5ல் வெற்றி 4ல் தோல்வி என 10 புள்ளிகளுடன் 4 வது இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் நிகர ரன் ரேட் 0.810 உடன் உயர்ந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்து 5 போட்டிகள் உள்ளன. அதில் 2 போட்டிகள் பஞ்சாப் அணியுடன் மோதவுள்ளது. இதன் முதல் போட்டி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.அடுத்த மே.5 ஆம் முல்லான் பூர் (பஞ்சாப்) நடைபெறவுள்ளது.
இது இல்லாமல் குஜராத் (மே.10) , ராஜஸ்தான்(மே.12) ஆகிய போட்டிகள் உள்ளன. இந்த 5 போட்டிகளில் குறைந்தபட்சம் 3 போட்டிகளில் வெற்றி பெற்றால் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் போக வாய்ப்பு உள்ளது, அதுவே 4 வெற்றிகள் பெற்றால் சுலபமாக உள்ளே நுழைய வாய்ப்புள்ளது.
பஞ்சாப் பிளே ஆஃப்: நடப்பு ஐபிஎல் தொடரில் கணிக்கமுடியாத அணியாக வலம் வரும் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா அணிக்கு எதிரான கடைசி போட்டியில் 261 ரன்களை சேஸ் செய்து வரலாற்று வெற்றி பெற்று, கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் கிங்ஸ் 6ல் தோல்வி 3ல் வெற்றி என 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.ஆனால் நிகர ரன்ரேட் மைனஸ் 0.187 உள்ளது. இது அந்த அணிக்கு சற்று பின்னடைவாகும்.
இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அடுத்து 5 போட்டிகள் உள்ளன, இதில் 2 சிஎஸ்கே அணியுடன் உள்ளது.இதில் உள்ள ஒவ்வொரு போட்டியும் மிக முக்கியமாகும். அடுத்தாக, ஆர்சிபி (மே.9), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (மே19), ராஜஸ்தான் (மே15) ஆகிய போட்டிகள் உள்ளன. இதனால் பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் மிகக் கடுமையாக போராட வேண்டும்.
குறிப்பாக சிஎஸ்கேவிற்கு எதிரான 2 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும், ஒரு வேளை சிஎஸ்கே அணியிடம் இரு ஆட்டங்களிலும் தோற்றுவிட்டால் பஞ்சாப் ப்ளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துவிடும். இனி வரவிருக்கும் போட்டிகள் அனைத்துமே வாழ்வா? சாவா? என்ற சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று எதிர்கொள்கிறது பஞ்சாப் கிங்ஸ். சொந்த மைதானத்தில் கில்லியாக வலம் வரும் சென்னை - பஞ்சாப் படையை சமாளிக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
இதையும் படிங்க: ஸ்டைலாக விளையாடிய ஸ்டோய்னிஸ்..மும்பையை வீழ்த்தி 6வது வெற்றி பெற்ற லக்னோ!