ஹைதராபாத்: 17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் முதல் 4 இடங்களை பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதனால் அடுத்து வரக்கூடிய ஒவ்வொரு போட்டிகளின் முடிவும் முக்கியமானதாகும். அந்த வகையில், இன்று நடைபெறும் 57வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை எதிர்கொள்கிறது.
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த போட்டியானது தொடங்கப்படவுள்ளது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி 6 வெற்றி, 5 தோல்வி என புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
நிகர ரன்ரேட் மைனஸ் 0.065 உள்ளது. இருப்பினும், இன்றைய போட்டியில் ஹைதராபாத் வெற்றி பெற்றால் அந்த அணி பிளே ஆஃப் பிரகாசமாகிவிடும். அதேபோல், லக்னோ அணியைப் பொறுத்தவரையில் 11 போட்டிகளில் விளையாடி 6-ல் வெற்றி பெற்றுள்ளது.
ஆனால், நிகர ரன்ரேட் மைனஸ் 0.371 ஆகவுள்ளது. இதன் காரணமாக புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல வேண்டும் என்றால், மீதமுள்ள 3 போட்டிகளிலும் 2ல் போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
பலம் மற்றும் பலவீனம்: தொடரின் ஆரம்பத்தில் பேட்டிங்கில் வலுவான அணியாக திகழ்ந்து வந்த ஹைதராபாத், கடந்த சில போட்டிகளில் பேட்டிங்கில் சொதப்பி வருகிறது. குறிப்பாக, அபிஷேக் சர்மா மற்றும் கிளாசென் ஆகியோர் மீண்டும் வலுவான தொடக்கத்தைத் தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பந்து வீச்சில் டி.நடராஜன், புவனேஸ்வர் குமார், பேட் கம்மின்ஸ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளது, அந்த அணியின் பலமாகப் பார்க்கப்படுகிறது.
லக்னோ அணியைப் பொறுத்தவரையில், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டி-காக் ரன் எடுக்க தடுமாறி வருகின்றார். இருப்பினும், கேப்டன் கே.எல்.ராகுல், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்துவீச்சைப் பொறுத்தவரையில், இளம்பந்து வீச்சாளர்களான மயங்க் யாதவ், மோஷின் கான், யாஷ் தாக்கூர் ஆகியோர் வலுசேர்க்கின்றனர்.
இரு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் 3 முறையும் லக்னோ அணியே வெற்றி பெற்றுள்ளது. இதற்கு இன்றைய போட்டியில் பதிலடி கொடுக்குமா பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணி என்பதைப் பொறுத்து இருந்து பார்ப்போம்.
இதையும் படிங்க: சிஎஸ்கே VS ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்!