ஹைதராபாத்: ஐபிஎல் தொடரின் 18வது போட்டி இன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 7வது இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ரச்சின் ரவீந்தரா மற்றும் அந்த அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் களம் இறங்கினர். ஆனால் இந்த கூட்டணி பெரிதாக சோபிக்கவில்லை.
ரச்சின் 12 ரன்களில் ஆட்டமிழக்க, அதனைத் தொடர்ந்து ருதுராஜும் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் சேர்ந்த ரஹானே - சிவம் துபே கூட்டணி அணிக்கு ரன்களை சேர்த்தது. சிவம் துபே அதிரடி காட்ட, ரஹானே அவருக்கு சிங்கல் தட்டி கொடுத்து உதவினார்.
சிறிது நேரம் நிலைத்த இந்த கூட்டணியை பேட் கம்மின்ஸ் பிரித்தார். 24 பந்துகளில் 4 சிக்சர்கள், 2 ஃபோர்கள் உட்பட 45 ரன்கள் எடுத்த சிவம் துபே புவனேஸ்வரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் ரஹானே 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ரவிந்தர ஜடேஜா அணிக்கு ரன்களை சேர்த்தார். இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக புவனேஸ்வர், நட்ராஜன், கம்மின்ஸ், உனத்கட் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். களத்தில் ஹெட் மற்றும் எய்டன் மார்க்ரம் உள்ளனர். 3 ஓவர்கள் முடிவில் அந்த அணி 1 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 120 ரன்கள் தேவையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: MI Vs DC: கம்பேக் கொடுக்கும் சூர்யகுமார் யாதவ்! மும்பை ஆட்டம் இனி எப்படி இருக்கும்? - Suryakumar Yadav