டெல்லி: நடப்பு ஐபிஎல் தொடரின் 40வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர் கொண்டது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக ஜேக் ஃப்ரேசர் - பிரித்வி ஷா ஆகியோர் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அடித்து ஆட தொடங்கினர். இதில் ஃப்ரேசர் 23 ரன்களுக்கு வெளியேற, மற்றொரு ஓப்பனிங் பேட்ஸ்மேனான பிரித்வி ஷா 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஷாய் ஹோப் 5 ரன்களுக்கு வெளியேறினார்.
இதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் அக்சார் பட்டேல் ஆகிய இருவரும் இணைந்து, சரிவிலிருந்த டெல்லி அணி மீட்டனர். இதில் அதிரடியாக விளையாடிய அக்சார் பட்டேல் 43 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் களமிறங்கிய ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் - ரிஷப் பண்ட்வுடன் இணைந்து அதிரடி காட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது டெல்லி. பொறுப்புடன் விளையாடி ரிஷப் பண்ட் 88 ரன்களுடனும், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 26 ரன்களுடனும் களத்திலிருந்தனர்.
இதன் பின்னர் 225 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியது குஜராத் டைட்டன்ஸ். அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக கேப்டன் சுப்மன் கில் - விருத்திமான் சாஹா ஆகியோர் களமிறங்கினர். இதில் 6 ரன்களுக்கு அவுட் ஆகி சுப்மன் கில் ஏமாற்றம் அளித்தார்.
அடுத்து சாஹாவுடன் -சாய் சுதர்ஷன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் 39 ரன்கள் எடுத்து இருந்த சாஹா தன்னுடைய விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய ஒமர்சாய் வந்த வேகத்தில் 1 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேற, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாய் சுதர்சன் 65 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஷாருக்கான(8), திவாட்டியா(4) என இருவரும் அடுத்தடுத்து வெளியேறினார். மறு முனையில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய மில்லர், 23 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 55 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் விக்கெட் இழந்தார்.
அடுத்தாக ரஷித் கானுடன் - சாய் கிஷோர் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் மட்டுமே எடுத்தது குஜராத். இதனால் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முடிவில் டெல்லி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திலிருந்த டெல்லி கேபிடல்ஸ், இந்த வெற்றியின் மூலம் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே போல் 6வது இடத்தில் இருந்த குஜராத் டைட்டன்ஸ் 8வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாஸாக விளையாடிய மார்கஸ்.. சிஎஸ்கேவை சிதறடித்து புள்ளிப் பட்டியலில் முன்னேறி லக்னோ அணி!