அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் 17வது போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதி வருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி குஜராத் டைட்டனஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக விருத்திமான் சாஹா மற்றும் கேப்டன் சுப்மன் கில் களமிறங்கினர். சற்று தடுமாறிய சாஹா 13 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரபாடா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் வந்த கேன் வில்லியம்சன் சிறிது நேரம் கில்லுடன் ரன்களை சேர்த்த நிலையில், அவரும் 26 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் சாய் சுதர்சன் 33, விஜய் சங்கர் 8 ரன்கள் என ஆட்டமிக்க, மறுமுனையில் தொடக்க இருந்து சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் அரைசதத்தை கடந்தார்.
இறுதியில் குஜராத் அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 89 ரன்களுடனும், ராகுல் திவாட்டியா 23 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பஞ்சாப் அணி சார்பாக ரபாடா 2 விக்கெட்களும், ஹர்ப்ரீத் ப்ரார் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து பஞ்சாப் அணி 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி விளையாடி வருகிறது. இதில் அந்த அணியின் கேப்டன் ஷிகர் தவான் 1 ரன்களில் ஆட்டமிழக்க, ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் பிரப்சிம்ரன் சிங் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர். பஞ்சாப் அணி 2 ஓவர்கள் முடிவில் 19 ரன்கள் எடுத்துள்ளது.
இதையும் படிங்க: ஜூலை 5ஆம் தேதி முதல் தொடங்குகிறது... டிஎன்பிஎல் கிரிக்கெட் கொண்டாட்டம்! - TNPL 2024 Schedule