சென்னை: 17 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷ், கனடாவின் டொரெண்டோவில் நடைபெற்று முடிந்த கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் வெற்றி பெற்று சாதனை படைத்திருந்தார்.
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் வெற்றி பெற்றதன் மூலம், அவர் செஸ் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வெல்வதற்கான ஆட்டத்தில் சீனாவின் டிங் லிரனுடன் இந்த ஆண்டு இறுதியில் மோத உள்ளார். செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு விளையாடும் இரண்டாவது இந்திய செஸ் வீரர் குகேஷ் ஆவார்.
இந்த நிலையில், கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் வெற்றி பெற்ற குகேஷ் இன்று (ஏப்.25) சென்னை வந்தடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, குகேஷ் படித்த வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் வரவேற்பு கொடுக்கப்பட்ட நிலையில், அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. இந்த தொடரை வெல்வது என்னுடைய கனவாக இருந்தது. தற்போது அந்த கனவு நிறைவேறி உள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் பொதுமக்கள் சிறப்பான ஆதரவைக் கொடுத்தனர்.
உலக சாம்பியன் தொடருக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளதால் பயிற்சியை பற்றி பெரிதாக யோசிக்கவில்லை. இனிமேல் தான் எங்கள் பயிற்சி குழுவுடன் ஆலோசித்து, சாம்பியன் தொடரை எதிர்கொள்வதற்கான திட்டங்களை வகுப்போம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த தலைமுறையில் அதிக திறன் கொண்ட வீரர்கள் செஸ்ஸில் உள்ளனர். பலருக்கு செஸ் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. அதேபோல், என்னுடைய இந்த வெற்றி அடுத்த தலைமுறையினரை ஊக்கவிக்கும் வகையில் இருக்கும் என நம்புகிறேன்.
செஸ் போட்டியில் நல்ல எதிர்காலம் உள்ளது. அதனை ஏற்கனவே விஸ்வநாதன் ஆனந்த் உறுதி செய்திருக்கிறார். மேலும், செஸ் விளையாட்டின் மூலம் அதிகம் கற்றுக்கொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பரபரப்பான ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்திய டெல்லி.. புள்ளி பட்டியலில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்ன? - Delhi Capitals Beat Gujarat Titans