ஹராரே: இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து நடந்த மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3-க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று (ஜூலை.14) ஹராரே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராஸா பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை குவித்தது.
A 42-run victory in the 5th & Final T20I 🙌
— BCCI (@BCCI) July 14, 2024
With that win, #TeamIndia complete a 4⃣-1⃣ series win in Zimbabwe 👏👏
Scorecard ▶️ https://t.co/TZH0TNJcBQ#ZIMvIND pic.twitter.com/oJpasyhcTJ
அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 58 ரன்கள் விளாசினார். தொடர்ந்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. ஜிம்பாப்வே அணிக்கு தொடக்கமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. தொடக்க வீரர் வெஸ்ஸ்லீ மாதவரே இந்திய வீரர் முகேஷ் குமார் பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பிரையன் பென்னட் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அதே முகேஷ் குமார் ஓவரில் 10 ரன்கள் எடுத்த நிலையில் பிரையன் பென்னட் ஆட்டமிழந்தார். இதனிடையே களமிறங்கிய டியான் மையர்ஸ் மற்றொரு தொடக்க வீரர் மருமணியுடன் இணைந்து சிறிது நேரம் தாக்குபிடித்தார்.
இந்த ஜோடியை தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் பிரித்தார். அவரது பந்துவீச்சில் தொடக்க வீரர் மருமணி 27 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின் ஆட்டம் மெல்ல இந்தியா பக்கம் திரும்பியது. இந்திய வீரர்களின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஜிம்பாப்வே வீரர்கள் நடையை கட்டினர். கேப்டன் சிக்கந்தர் ராஸா 8 ரன், சிறிது நேரம் தாக்குப்பிடித்த டியான் மையர்ஸ் 34 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
கடைசி கட்டத்தின் பராஸ் அக்ரம் மட்டும் சிறிது நேரம் நிலைத்து நின்று போராடினார். இறுதியில் அவரும் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்கள் முடிவில் 125 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஷிவம் துபே 2 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் சர்மா, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 4-க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதையும் படிங்க: ஜிம்பாப்வேக்கு 168 ரன்கள் வெற்றி இலக்கு! சஞ்சு சாம்சன் அரைசதம் விளாசல்! - Ind vs Zim 5th T20 Live