பாரீஸ்: உலகின் விளையாட்டுத் திருவிழா என்று அழைக்கப்படும் ஒலிம்பிக் போட்டிகள், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்றைய நாள் வரை, சீனா (16 தங்கம், 12 வெள்ளி, 9 வெண்கலம்) முதல் இடத்திலும், அமெரிக்கா (14 தங்கம், 24 வெள்ளி, 23 வெண்கலம்) என 2வது இடத்தில் உள்ளது. ஒலிம்பிக் போட்டி நடத்தி வரக்கூடிய பிரான்ஸ் நாடானது 12 தங்கம், 14 வெள்ளி, 15 வெண்கலம் பெற்று 3வது இடத்தில் உள்ளது. இந்த பதக்க பட்டியலில் இந்தியா (3 வெண்கலம்) 53வது இடத்தில் உள்ளது.
குத்துச்சண்டை: இந்த நிலையில், நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் இந்திய வீரர் நிஷாந்த் தேவ், மெக்சிகோவின் மார்கோ வெர்டேவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் சுற்றை ஆக்ரோஷமாக ஆரம்பித்த நிஷாந்த் தேவ் புள்ளி கணக்கைத் துவங்கினார்.
ஆனால், கடைசி இரண்டு சுற்றுகளில் மார்கோ கம்பேக் கொடுத்தார். இதன் விளைவாக, 4-1 என்ற கணக்கில் மார்கோ வெற்றி பெற்றார். பாரீஸில் பதக்கம் வெல்வார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் ஒருவரான நிஷாந்த் தேவ் தோல்வியைச் சந்தித்து இருப்பது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, 'ரவுண்டு-16' போட்டியில் நிஷாந்த் தேவ், ஈகுவடாரின் ஜோஸ் கேப்ரியல் ரோட்ரிக்ஸ் டெனோரியோ மோதினர்.
இந்த போட்டியில், நிஷாந்த் தேவ் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக இந்திய வீரர் அமித் பங்கல் 51 கிலோ எடைப் பிரிவில் 1-4 என்ற கணக்கில் ஜாம்பியாவின் பேட்ரிக் சின்யெம்பாவிடம் தோல்வியைத் தழுவினார்.
இன்றைய போட்டி: பெண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லவ்லினா போர்கஹைன், சீனாவின் லி குவெனை இன்று (ஞாயிற்றுக்கிழமை) எதிர்கொள்கிறார். அதேபோல், மகளிருக்கான 75 கிலோ எடைப்பிரிவின் ரவுண்ட் 16வது சுற்றில் நார்வேயின் சன்னிவா ஹாஃப்ஸ்டெட்டை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார் லவ்லினா போர்கஹைன். தற்போது அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.
இதையும் படிங்க:ஒலிம்பிக்கில் ஞாயிற்றுக்கிழமை இந்திய வீரர்கள் விளையாடும் போட்டிகள் என்னென்ன?