ஐதராபாத்: 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - இந்தியா மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த போட்டியில் இந்திய வேகப் பந்துவீச்சாளர் அருந்ததி ரெட்டி ஐசிசி நடத்தை விதிகளை மீறி நடந்து கொண்டதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய அருந்ததி ரெட்டி 19 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. அருந்ததி ரெட்டி வீசிய 20வது ஓவரில் நிதா தார் ஆட்டமிழந்தார்.
An India pacer has been reprimanded for breaching the ICC Code of Conduct during their Women's #T20WorldCup contest against Pakistan.https://t.co/ez3kvtjiDR
— ICC (@ICC) October 7, 2024
அவரது விக்கெட்டை வீழ்த்திய பின் ஆக்ரோஷமாக அவரை வெளியேறுமாறு சைகை செய்தார் அருந்ததி ரெட்டி. ஐசிசி நடத்தை விதிகளின் படி இது விதி மீறல் ஆகும். ஒரு சர்வதேச போட்டியின் போது ஒரு வீரர் ஆட்டம் இழந்து செல்லும் போது அவரை இழிவுபடுத்தும் வகையிலோ, ஆக்ரோஷமான, எதிர்வினையை தூண்டக் கூடிய மொழி, செயல் அல்லது செய்கையைப் பயன்படுத்துதல் விதி மீறல் என ஐசிசி விதிகளில் கூறப்பட்டுள்ளது.
அதன் படி பாகிஸ்தான் வீராங்கனைக்கு எதிராக சைகை காட்டிய அருந்ததி ரெட்டிக்கு ஒரு டீமெரிட் புள்ளி மற்றும் சிறு தொகை அபராதமாக விதிக்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மாத காலக் கட்டத்தில் அருந்ததி ரெட்டி செய்யும் முதல் தவறு என்பதால் அவருக்கு ஒரு டீமெரிட் புள்ளி மட்டும் அளிக்கப்பட்டு உள்ளது.
ஒரு வீரர் அல்லது வீராங்கனை நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட டீமெரிட் புள்ளிகளை பெற்றால் அவருக்கு சில போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும் என்பது ஐசிசி விதியாகும். இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் நாளை (அக்.9) துபாய் மைதானத்தில் வைத்து இலங்கையை எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க: வங்கதேசத்துக்கு எதிரான டி20 கிரிக்கெட்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி! - india vs bangladesh