ராஞ்சி: இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2 டெஸ்ட் கிரிக்கெட்டில் 106 ரன்களிலும் மற்றும் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த பிப்ரவரில் 23ஆம் தேதி ராஞ்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இங்கிலந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 353 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது. இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி 73 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் எடுத்து இருந்தது.
டி.சி ஜுரல் 30 ரன்களும், குல்தீப் யாதவ் 17 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். மற்றபடி தொடக்க வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வாலை(73 ரன்) தவிர்த்து வேறு எந்த வீரரும் சொல்லிக் கொள்ளும் அளவு விளையாடவில்லை. கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
அதிகபட்சமாக சுப்மன் கில் மட்டும் 38 ரன்கள் எடுத்து இருந்தார். இந்நிலையில் இன்று (பிப்.25) மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. டி.சி ஜுரல் மற்றும் மற்றும் குல்தீப் யாதவ் தொடர்ந்து விளையாடினர். குல்திப் யாதவ் தன் பங்குக்கு 28 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதேநேரம் மறுமுனையில் டி.சி ஜுரல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜுரல் 90 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மொத்தம் 103 புள்ளி 2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 307 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணி 53 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு ஏதுவாக மாறிய நிலையில் இந்திய சுழலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் திணறினர்.
இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஷேக் கிராவ்லே (60 ரன்) தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜானி பேர்ஸ்டோவ் 30 ரன், விக்கெட் கீப்பர் போக்ஸ் 17 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இங்கிலாந்து அணியின் ரன் வேகம் ஊசலாடியது. முடிவில் 53 புள்ளி 5 ஓவர்களில் இங்கிலாந்து அணி 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாட தொடங்கியது. ஆட்ட நேர முடிவில் 8 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 40 ரன்கள் குவித்து உள்ளது. கேப்டன் ரோகித் சர்மா 24 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 16 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
இந்திய அணியின் வெற்றிக்கு 152 ரன்கள் தேவைப்படுகின்றன. அதை அடைய இரண்டு நாட்களும், 10 விக்கெட்டுகளும் இந்திய அணியின் கைவசம் உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தொடரை 3-க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றும். அது சாத்தியமாகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க : இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்த விராட் கோலி! இந்தியாவிலேயே கோலி தான் முதல் ஆளாம்! என்ன தெரியுமா?