செயின்ட் லூசியா: டி20 உலகக் கோப்பையில் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, ஆஸ்திரேலியா போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது. ஹேசல்வுட் தனது முதல் ஓவரிலேயே இந்தியாவிற்கு அதிர்ச்சி கொடுத்தார்.
அவர் வீசிய ஓவரில் கோலி டக் அவுட்டாகி ஏமாற்றினார். பின்னர் ரோகித் சர்மா ஆட்டத்தை தன் கையில் எடுத்தார். ஸ்டார்க் வீசிய 3வது ஓவரில் சிக்சர், பவுண்டரி என நாளாபுறமும் சிதறடித்து 29 ரன்கள் எடுத்தார். 4வது ஓவரில் சிக்ஸ் அடித்ததன் மூலம் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ரோகித் சர்மா 200 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்தார். 19 பந்துகளில் அரைசதம் அடித்து இந்த உலகக்கோப்பையில் அதிவேக அரைசதம் அடித்து சாதனை படைத்தார்.
மறுமுனையில் தன் பங்கிற்கு அதிரடியாக விளையாடிய பண்ட் 15 ரன்களுக்கு ஸ்டொய்னிஸ் பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியதால் இந்தியாவின் ரன் ரேட் எகிறியது. இந்தியா அணி 9 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. 2 ஓவர்களில் 34 ரன்கள் வழங்கிய ஸ்டார்க், தனது 3வது ஓவரை வீச வந்தார். அப்போது சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த ரோகித் சர்மா 92 ரன்களுக்கு போல்டானார். மற்றொரு புறம் அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் ஸ்டார்க் பந்தில் 31 ரன்களுக்கு நடையை கட்டினார்.
India advance to the semi-finals of the #T20WorldCup 2024 🔥🇮🇳
— ICC (@ICC) June 24, 2024
Rohit Sharma's marvellous 92 combined with a superb bowling effort hand Australia a defeat in Saint Lucia 👏#AUSvIND | 📝: https://t.co/lCeqHIMg1Y pic.twitter.com/HklyIAXzvL
ஆரம்பத்தில் பொறுமையாக ஆடிய பாண்டியா கம்மின்ஸ் ஓவரில் வேகம் எடுத்தார். ஸ்டொய்னிஸ் வீசிய 18வது ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர் அடித்தார். அதே ஓவரில் பொறுமையாக ஆடி வந்த ஷிவம் தூபே 28 ரன்களுக்கு அவுட்டானார். இறுதியில் இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 205 ரன்கள் எடுத்தது.
கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு அர்ஷ்தீப் சிங் எடுத்த எடுப்பிலேயே வார்னரை 6 ரன்களுக்கு அவுட்டாக்கி அதிர்ச்சி தந்தார். பின்னர் கேப்டன் மிட்செல் மார்ஷ், ஹெட் ஜோடி அதிரடியாக ஆடியது. மார்ஷ் கொடுத்த கேட்ச்சை அர்ஷ்தீப் பிடிக்க தவறிய நிலையில், பலமுறை அதிர்ஷ்டவசமாக கண்டம் தப்பினார்.
மார்ஷ் 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில், குல்தீப் வீசிய பந்தில் பூல் ஷாட் ஆடினார். சிக்சர் போக வேண்டிய பந்தை அக்சர் அபாரமாக பாய்ந்து பிடித்தார். இந்த விக்கெட் ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது. ஆனால் மறுபக்கம் ஹெட் தனது அதிரடியை தொடர்ந்து இந்தியாவிற்கு அபாயமாக விளங்கினார். சற்று நேரம் அதிரடி காட்டிய மேக்ஸ் வெல் 20 ரனக்ளுக்கு அவுட்டானார்.
ஹெட் விக்கெட் முக்கியமானதாக கருதப்பட்ட நிலையில், பும்ரா வீசிய மெதுவான பந்தில் ரோகித்திடம் கேட்ச் கொடுத்து 76 ரன்களுக்கு அவுட்டானார். இந்த விக்கெட்டை தொடர்ந்து போட்டி கிட்டதட்ட இந்தியா பக்கம் திரும்பியது. பின்னர் வந்த வேட்(1), டிம் டேவிட் (15) ஆகியோர் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இந்நிலையில் இந்தியா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. வரும் 27ஆம் தேதி கயானாவில் நடைபெறும் அரையிறுதி போட்டியில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க: ஜிம்பாப்வே டி20 கிரிக்கெட் தொடர்: சுப்மான் கில் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி! - Zimbabwe T20 Series India Squad