துபாய்: மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான திருத்தப்பட்ட அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. புதிய அட்டவணையின் கீழ் வரும் அக்டோபர் 3ஆம் தேதி மகளிர் 20 ஓவர் உலக கோப்பை தொடங்குகிறது. முதல் நாளில் வங்கதேசம் - ஸ்காட்லாந்து அணிகள் ஷார்ஜாவில் மோதுகின்றன.
இந்தியா - பாகிஸ்தான் மகளிர் ஆட்டம் அக்டோபர் 6ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. மொத்தம் 23 ஆட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் அனைத்தும் துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெறுகின்றன. அதேநேரம் முன்னர் அறிவிக்கப்பட்ட படி குருப் பிரிவில் எந்தவித மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் குருப் ஏ பிரிவிலும், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து அணிகள் பி பிரிவிலும் அங்கம் வகிக்கின்றன. குருப் பிரிவில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறும். அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் அரைஇறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. தொடர்ந்து அதில் வெற்றி பெறும் அணிகள் அக்டோபர் 20ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதும்.
மழை உள்ளிட்ட ஏதேனும் பிரச்சினைகள் காரணமாக இறுதிப் போட்டி நடைபெறாமல் போனால் அதற்கு மறுநாளான அதாவது அக்டோபர் 21ஆம் தேதி ரிசர்வ் டே ஆக அறிவிக்கப்பட்டு உள்ளது. அரைஇறுதிப் போடிகளிலும் இந்த ரிசர்வ் டே முறை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக கோப்பை மகளிர் தகுதிச் சுற்றின் மூலம் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த தொடர் வங்கதேசத்தில் நடபெற திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் வங்கதேசத்தில் நிலவரம் அசாதாரண சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இதனிடையே இந்தியாவில் இந்த தொடரை நடத்த ஐசிசி பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், பிசிசிஐ பச்சைக் கொடி காட்டாத காரணத்தால் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உறுதி செய்யப்பட்டது.
20 ஓவர் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான திருத்தப்பட்ட அட்டவணை:
நாள் | யாராருக்கு போட்டி | இடம் |
அக்.3 | வங்கதேசம் - ஸ்காட்லாந்து | ஷார்ஜா |
அக்.3 | பாகிஸ்தான் - இலங்கை | ஷார்ஜா |
அக்.4 | தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் | துபாய் |
அக்.4 | இந்தியா - நியூசிலாந்து | துபாய் |
அக்.5 | வங்கதேசம் - இங்கிலாந்து | ஷார்ஜா |
அக்.5 | ஆஸ்திரேலியா - இலங்கை | ஷார்ஜா |
அக்.6 | இந்தியா - பாகிஸ்தான் | துபாய் |
அக்.6 | வெஸ்ட் இண்டீஸ் - ஸ்காட்லாந்து | துபாய் |
அக்.7 | இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா | ஷார்ஜா |
அக்.8 | ஆஸ்திரேலியா - நியூசிலாந்து | ஷார்ஜா |
அக்.9 | தென் ஆப்பிரிக்கா - ஸ்காட்லாந்து | துபாய் |
அக்.9 | இந்தியா - இலங்கை | துபாய் |
அக்.10 | வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் | ஷார்ஜா |
அக்.11 | ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் | துபாய் |
அக்.12 | நியூசிலாந்து - இலங்கை | ஷார்ஜா |
அக்.12 | வங்கதேசம்- தென் ஆப்பிரிக்கா | துபாய் |
அக்.13 | இங்கிலாந்து - ஸ்காட்லாந்து | ஷார்ஜா |
அக்.13 | இந்தியா - ஆஸ்திரேலியா | ஷார்ஜா |
அக்.14 | பாகிஸ்தான் - நியுசிலாந்து | துபாய் |
அக்.15 | இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் | துபாய் |
அக்.17 | முதலாவது அரைஇறுதி ஆட்டம் | துபாய் |
அக்.18 | இரண்டாவது அரைஇறுதி ஆட்டம் | ஷார்ஜா |
அக்.20 | இறுதிப் போட்டி | துபாய் |
இதையும் படிங்க: பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற தமிழக தடகள வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி கெளரவிப்பு! - paris olympics 2024