டெல்லி: டி20 உலகக் கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய அணி குறித்து முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தனது கருத்தை தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய அணி குறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில், "உலகக் கோப்பை இந்திய அணியில் பேட்டிங் வரிசை நன்றாக உள்ளது. இந்திய அணிக்கு ஒரு வேகப்பந்து வீச்சாளர் குறைவாக உள்ளனர்.
தனி ஆளாக போட்டியை வெல்லக்கூடிய திறன் கொண்ட ரிங்கு சிங்கின் திறனை இந்திய அணி இழக்கிறது. அவரால் 20 பந்துகளில் 60 ரன்கள் எடுக்க முடியும். இந்திய அணிக்கு மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் போதுமானது, நான்காவது சுழற்பந்து வீச்சாளர் தேவையற்றது. போட்டியில் கண்டிப்பாக ரவீந்திர ஜடேஜா இருப்பார். அவருடன் குல்தீப் யாதவ் மற்றும் சஹால் விளையாடுவார். இந்திய அணிக்கு சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் முக்கியம் வாய்ந்தவையாக அமையும்.
அப்போது தான் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட பலம் வாய்ந்த அணிகளுடன் இந்திய அணி மோதும். ஆனால் லீக் சுற்றில் ஜூன் 9ஆம் தேதி நடைபெறும் பாகிஸ்தான் உடனான போட்டி வெற்றிக் கணக்கை துவக்க உதவும். ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடியுள்ளார். அதே நேரத்தில் சஞ்சு சாம்சனும் நன்றாக விளையாடியுள்ளார். அவர் தொடர்ந்து 60, 70 ரன்களுக்கு மேல் அடிக்கிறார்" எனக் கூறியுள்ளார். ரிங்கு சிங் கடந்த 2023ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான டி20யில் இந்திய அணிக்காக முதல் போட்டியில் களமிறங்கினார்.
இதுவரை 15 போட்டியில் விளையாடியுள்ள ரிங்கு சிங், 356 ரன்கள் எடுத்துள்ளார். கடைசியாக ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் கடந்த ஜனவரி மாதம் விளையாடினார். இந்த டி20 உலகக் கோப்பையின் ரிசர்வ் அணியில் ரிங்கு சிங் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காயத்திற்கு பிறகு ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய ரிஷப் பண்ட், இதுவரை 13 போட்டிகளில் 446 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 3 அரைசதங்கள் அடங்கும். அதேபோல் சஞ்சு சாம்சன் இந்த ஐபிஎல் சீசனில் 13 போட்டிகளில் 56 சராசரியில் 504 ரன்கள் குவித்துள்ளார். இதில் 5 அரைசதங்கள் அடங்கும். டி20 உலகக் கோப்பையில் இந்தியா ஜூன் 5ஆம் தேதி முதல் போட்டியில் அயர்லாந்துடன் மோதுகிறது.
இதையும் படிங்க: ஆர்சிபி தகுதிச் சுற்றில் நுழைந்தது எப்படி? பெங்களூரு 'ஹீரோ' யாஷ் தயாள் சிறப்பு பேட்டி! - YASH DAYAL